'பிரியதர்ஷினி' இலவச பேருந்து பயணத் திட்டம் கேரளத்தில் தொடக்கம் !

பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டத்தைத் கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் தொடங்கி வைத்தது.
Priyadarshini Scheme Launch
Published on

கேரள மாநிலம் முழுவதும் சாதாரண கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவசப் பயணத்தை வழங்கும் பிரியதர்ஷினி திட்டத்தை கேரள அரசு அறிவித்தது.

இத்திட்டத்தை முதலமைச்சர் வி.டி. சதீசன் இன்று காலை 8.30 மணிக்கு தம்பானூர் பேருந்து நிலையத்தில் முறைப்படி தொடங்கிவைத்தார்.

சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் அறிவித்த ஐந்து 'இந்திரா உத்தரவாதங்களில்' ஒரு பகுதியாக இந்தத் திட்டம் உள்ளது.

முதற்கட்டமாக அனைத்து வயதுப் பெண்களும் திருநங்கைகளும் இலவசப் பயணத்திற்குத் தகுதி பெறுவார்கள். மேலும் முன் பதிவு, ஆவணங்கள் அல்லது விண்ணப்ப செயல்முறை என எதுவும் தேவையில்லை.

பயணம் செய்யும்போது ​​நடத்துனர்களிடமிருந்து மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் வழங்கப்படும் இலவச 'பிரியதர்ஷினி' பயணச்சீட்டைப் பெற்றால் மட்டும் போதுமானது என பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தற்போது இயக்கப்படும் 3,125 சாதாரண பேருந்துகள் அனைத்திலும் இந்தச் சலுகை வழங்கப்படும் எனவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மாநில அளவிலான தொடக்க விழாவைத் தொடர்ந்து, கேரளா முழுவதும் உள்ள கே.எஸ்.ஆர்.டி.சி பணிமனைகளில் காலை 9 மணி முதல் மக்கள் பிரதிநிதிகளின் தலைமையில் உள்ளூர் தொடக்க விழாக்கள் நடைபெறும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் சலுகையால் கே.எஸ்.ஆர்.டி.சி-க்கு மாதம் ரூ.60 கோடிக்கு மேல் செலவாகும் என் முதலமைச்சர் சதீசன் சமீபத்தில் தெரிவித்தார். மேலும் இந்தச் செலவுகள் முழுவதையும் மாநில அரசே ஏற்கும் என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com