மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1000 கோடி உதவித் தொகை- மத்திய அரசு வழங்கியது

பெண்களின் திருமண வயதை அதிகரிக்கும் மத்திய அரசின் முடிவால், அவர்கள் தங்களது கல்வியை தொடரவும், சம வாய்ப்புகளை பெறவும் முடியும். ஆனால் சில பிரிவினர் மட்டும் இந்த முடிவால் தொந்தரவு அடைந்துள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

பிரயக்ராஜ்:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அம்மாநில வாக்காளர்களை கவரும் வகையில்  பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக பிரயக்ராஜ் மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் பெண்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பிரதமர் மோடி வழங்கினார்.  

இதன் ஒரு பகுதியாக அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு மகளிர் சுய உதவிக்குழுக்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.1000 கோடி உதவித் தொகையை மத்திய அரசு இன்று செலுத்தியது.  அதை தொடர்ந்து ‘முக்கிய மந்திரி கன்னிய சுமங்கலா  திட்டத்தின்’ கீழ் பயன்பெறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயனாளர்களுக்கு ரூ.20 லட்சம் கோடி உதவித் தொகையை  பிரதமர் மோடி வழங்கினார்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

பெண்களின் வளர்ச்சிக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இங்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்டங்கள், அடிமட்ட நிலையில் உள்ள பெண்கள் தேவையான உதவிகளை பெற வழிவகுக்கும். மகளிர் சுய உதவிக்குழுக்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ள ரூ.1000 கோடி தொகை மூலம் 16 லட்சம் பெண்கள் பலன் பெறுவர். 

மேலும், முக்கிய மந்திரி கன்னிய சுமங்கலா திட்டத்தின் கீழ் பயன் பெறும் பெண் குழந்தைகளுக்கு சில வருடங்களுக்கு முன்பு வங்கி கணக்குகள் கூட கிடையாது. ஆனால் இன்று அவர்கள் டிஜிட்டல் வங்கி சேவைகள் மூலம் பயன் பெற்று வருகின்றனர்.

’பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின்’ கீழ் உத்தரப்பிரதேசத்தில் 30 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் 25 லட்சம் வீடுகள் பெண்களின் பெயரில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல தலைமுறைகளாக சொத்துரிமையே இல்லாத பெண்களுக்கு இன்று தனி வீடே இருக்கிறது. இது தான் மகளிருக்கு அளிக்கப்பட்டுள்ள உண்மையான அதிகாரம். இதை நினைவில் வைத்துக் கொண்டு உத்தரப்பிரதேச மகள்கள் மீண்டும் பழைய அரசாங்கம் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதை முடிவு செய்து விட்டனர்.

இதைத் தவிர, மத்திய அமைச்சரவை, பெண்களின் திருமண வயதை அதிகரிக்கும் முடிவை எடுத்துள்ளது. இதன் மூலம் பெண்கள் தங்களது கல்வியை தொடரவும், சம வாய்ப்புகளை பெறவும் முடியும். ஆனால் சில பிரிவினர் மட்டும் இந்த முடிவால் தொந்தரவு அடைந்துள்ளனர்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com