

பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம், காப்பீட்டு நிறுவனத்திலும் விரைவில் கால்பதிக்க உள்ளது.
பதஞ்சலி ஆயுர்வேதம் நிறுவனம், நுகர்வோர் பொருட்கள் மற்றும் ஆயுர்வேத மருந்துகள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், மக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தை சுமார் 4,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாங்குவதற்கு பதஞ்சலி நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் பிரபல உணவு விற்பனை நிறுவனமான டி.எஸ் குழுமத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேக்மா இன்சூரன்ஸ் நிறுவனத்தை பதஞ்சலி கையகப்படுத்துவதற்கு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம் வேகமாக வளர்ந்து வரும் பொதுக் காப்பீட்டு சந்தையில் பதஞ்சலி நிறுவனம் இணைந்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம், மக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 73.56 சதவீத பங்குகளையும், டி.எஸ் குழுமம் 24.5 சதவீத பங்குகளையும் பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தத்திற்கான பணப் பரிவர்த்தனையை மூன்று மாத காலத்திற்குள் முடிக்குமாறு ஐ.ஆர்.டி.ஏ.ஐ (IRDAI) தெரிவித்துள்ளது.
மக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் சமீபத்திய ஆண்டுகளில் தனது வணிகத்தை சீராக விரிவுபடுத்தி உள்ளது.
இந்த காப்பீட்டு நிறுவனத்தின் மொத்த பிரீமியம் முந்தைய நிதியாண்டில் ரூ.3,334.4 கோடியாக இருந்த நிலையில், தற்போது இந்த நிதியாண்டில் இதன் பிரீமியம் ரூ.3,615.48 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்த ஒழுங்குமுறை பரிவர்த்தனை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவடையும் பட்சத்தில், பதஞ்சலி நிறுவனம் இந்தியாவின் பொதுக் காப்பீட்டுத் துறை நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுக்க உள்ளது.