மாணவர்கள் மீது தாக்குதல் விவகாரம்.. அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அவர் எதன் பின்னணியில் பதவி விலகினார் என்பதை யோசித்து பாருங்கள்.
மக்களவை
மக்களவை
Published on

இரண்டாம் கட்ட நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நேற்றைய தினமே, பொதுத்தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026-ஐ மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் தாக்கல் செய்தார்.

இன்று அதன் மீதான விவாதம் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்றை போலவே இன்றும் இரு அவைகளிலும், தேர்வு முறைகேடுகள், ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்திய மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதிக்க கோரி கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

ஒத்திவைப்பு

இதனால் காலை 11 மணிக்கு தொடங்கிய சொற்ப நேரத்திலேயே இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், "சபை நடந்தால் தான் விவாதமும் கலந்துரையாடலும் நடைபெறும், அனைவரின் கருத்துக்களையும் வெளிப்படுத்த முடியும். அப்போது தான் அந்த செய்தி நாடு முழுவதும் சென்று சேரும் எனக் குறிப்பிட்டார்.

அவை நடவடிக்கைகள்

தொடர் தொடங்கியதில் இருந்து தினமும் ஒத்திவைப்புகள் நடந்து வருவதால் அவை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டத்தில் தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற அமளி நீடித்தது. சிஜேபி தலைமையில் இளைஞர்களின் 1 மாத போராட்டத்தின் பின் அவர் பதவி விலகிய நிலையில், தற்போது மாணவர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளனர்.

வெட்கமாக இல்லையா?

இதனிடையே காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி பேசுகையில், நேற்று தர்மேந்திர பிரதானுக்கு தலைப்பாகை, சால்வை அணிவித்து என்டிஏ எம்.பிக்கள் வரவேற்றத்தை விமர்சித்தார்.

அவர் கூறியதாவது, " உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அவர் எதன் பின்னணியில் பதவி விலகினார் என்பதை யோசித்து பாருங்கள். ஆனாலும் அவர் சூப்பர்ஸ்டாரை போல வரவேற்கபடுகிறார்.

இன்றைக்கும் கூட மாணவர்கள் துன்புறுத்தப்பட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இன்ஸ்ட்டாகிராமில் பெண்களின் புகைப்படங்களை பதிவிட்டு, அவர்கள் இதைச் செய்தார்கள், அதைச் செய்தார்கள் என தரக்குறைவாக பேசி வருகிறார்கள். நீங்கள் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கும் முன்வரவில்லை, இந்த பிரச்னையை சுமூகமாக தீர்க்கமும் விரும்பவில்லை. நீங்கள் மாணவர்களை இப்போதும் கூட அடக்கி ஒடுக்க முயல்கிறீர்கள்" என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com