

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. நீட் வினாத்தாள் கசிவு, ராமர் கோவில் நன்கொடை முறைகேடு, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் கடந்த 2 தினங்களாக நாடாளுமன்றத்தில் அலுவல் எதுவும் நடைபெறாமல் முடங்கியது.
நாடாளுமன்றத்தில் இன்றும் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் ராமர் கோவில் நன்கொடை தொடர்பான முறைகேடு மற்றும் நீட் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்தியதற்கும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கு சபாநாயகர் ஓம்பிர்லா, இது கேள்வி நேரம். முக்கியமானது. கேள்வி நேரம் முடிந்த பிறகு நீங்கள் கொடுத்த விவகாரங்கள் பற்றி விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் விரும்பும் வரை விவாதிக்கலாம். ஆனால் திட்டமிட்டு அவையின் நடவடிக்கைக்கு இடையூறு செய்வது நல்லதல்ல என்றார். ஆனால் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் அவையை 2 மணி வரை ஒத்திவைத்தார்.
12 மணிக்கு சபை கூடியதும் நீட் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கூறியதாவது:
விவாதம் எவ்வளவு நேரம் நடைபெறும், எந்த விதியின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த முடிவை அனைத்துக் கட்சி தலைவர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க அரசு முழுமையாக தயாராக உள்ளது. இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நாம் அனைவரும் இணைந்து அர்த்தமுள்ள விவாதத்தை நடத்தவேண்டும் என்பதே அரசின் விருப்பம் ஆகும் என தெரிவித்தார்.
ஆனால் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
மேல்சபையிலும் நீட் விவகாரம் தொடர்பாக மாணவர்கள் மீதான தடியடியைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்தப் பிரச்சனையை பேசினார். இதற்கு ஆளும் கட்சி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கார்கேவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குரல் கொடுத்தனர். இதனால் அவையில் கூச்சல்-அமளி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் ஏற்பட்ட அமளியால் மேல் சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.