இரவு ஊரடங்கு, கட்டுப்பாட்டு நடவடிக்கையை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

ஒமைக்ரான் பாதிப்பு 200-ஐ தாண்டிய நிலையில் இரவு ஊரடங்கு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கொரோனா வைரஸ் உருமாறி ஒமைக்ரான் வைரசாக உருவெடுத்துள்ளது. ஒமைக்ரான் வைரஸ் முதன் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. அதன்பிறகு மற்ற வெளிநாடுகளிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவத்தொடங்கியது.

இந்தியாவில் கடந்த 2-ந்தேதி முதல் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப் பட்டது. நேற்றுவரை இந்தியா வில் 220 பேர் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 65 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உள்ளது. அதற்கு அடுத்தபடியாக டெல்லியில் 54 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உள்ளது.

தெலுங்கானாவில் 24 பேரும், கர்நாடகாவில் 19 பேரும், ராஜஸ்தானில் 18 பேரும், கேரளாவில் 15 பேரும், குஜராத்தில் 14 பேரும், உத்தரபிரதேசம், ஒடிசாவில் தலா 2 பேரும், தமிழகம், ஆந்திரா, மேற்கு வங்காளம், சண்டிகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட் டுள்ளனர்.இந்தியாவில் ஒமைக்ரான் பாதித்த 77 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் அதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூ‌ஷன் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தற்போதைய அறிவியல் பூர்வமான ஆதாரத்தின்படி கொரோனா டெல்டா வைரசை விட குறைந்த பட்சம் 3 மடங்கு வேகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவும். அதேவேளையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டெல்டா வைரசால் பாதிக்கப்படுபவர்களும் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகிறார்கள்.

எனவே ஒமைக்ரான் பரவாமல் தடுக்க உள்ளூர் மற்றும் மாவட்ட அளவில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரானை கட்டுப்படுத்த மாநில அரசுகள் போர்க்கால ஆயத்த அறை களையும், அவசரகால நடவடிக்கை மையங்களையும் ஏற்படுத்த வேண்டும். மேலும் இரவுநேர ஊரடங்கை அமல் படுத்த வேண்டும்.

பெரிய அளவில் நடத்தப்படும் கூட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். இறுதிச் சடங்குகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டும்.

அலுவலகங்களுக்கு வரும் ஊழியர்களின் எண்ணிக் கையை கட்டுப்படுத்த வேண்டும். பொது போக்குவரத்துகளிலும் பயணிகள் குறைந்த அளவில் பயணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அந்தந்த பகுதி களில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அடிப்படையில் உள்ளூர் அளவிலும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகிகள் ஒமைக்ரான் பரவல் எண்ணிக்கையை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.

ஒமைக்ரான் வைரஸ் பரவல் வீதத்தை முன் கூட்டியே பகுப்பாய்வு செய்ய வேண்டும். சரியான நேரத்தில் ஒமைக்ரான் வைரசை கண்டறிந்து கட்டுப்படுத்தாவிட்டால் அது விரைவாக பரவும் என்பதால் உள்ளூர் மாவட்டத்திலும் அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

இதுவரை ஒமைக்ரான் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டாலும் இந்த கட்டுப்பாடுகள் அவசியமானதாக கருதப்படுகிறது.

ஒமைக்ரானுடன், டெல்டா வைரசும் பரவி வருவதால் இன்னும் பெரிய அளவில் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு கண்காணிப்பில் தீவிரம் காட்ட வேண்டும். உள்ளூர், மாவட்ட அளவில் கடுமையான மற்றும் உடனடி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த வி‌ஷயத்தில் மாநில அரசுகள் மாவட்ட அளவில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு லேசானதாக இருந்தாலும் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு அதிக உயிரிழப்புகளையும், பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம்.

கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து கட்டுப்பாட்டில் உள்ள போதும் ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. ஒமைக்ரான் பரவல் வேகம் டெல்டா வைரசை விட 3 மடங்கு அதிகமாக இருப்பதே இதற்கு காரணம்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் தெருக்கள், கட்டுப்பாட்டு மண்டலங்கள் பற்றி உடனடி அறிவிப்பு செய்யப்பட வேண்டும். தற்போதுள்ள வழிகாட்டுதல்களின்படி கட்டுப்பாட்டு மண்டலத்தின் சுற்றளவை கடைபிடித்து கட்டுப்பாடு உறுதி செய்யப்பட வேண்டும்.

கள அதிகாரிகள் வழக்கமான ஆய்வுகளை செய்து நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும். வீடு வீடாக சோதனை நடத்தி காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சினை இருப்பவர்களை கண்காணிக்க வேண்டும். மருத்துவமனையில் உள் கட்டமைப்பு வசதிகளையும் தயார்நிலையில் வைக்க வேண்டும். 2-வது தவணை தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்தி 100 சதவீதம் முடிக்க வேண்டும்.

முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்ட வர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வீடு வீடாக சென்று தடுப்பூசி போடுவதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com