video-பெண்மையைப் போற்றும் ஒடிசாவின் ‘ராஜா பர்பா’ திருவிழா கோலாகலத் தொடக்கம்!

இந்த 3 நாட்கள் அங்கிருக்கும் பெண்களுக்கு வீட்டு வேலைகளில் இருந்து முழுமையாக ஓய்வு அளிக்கப்படுகிறது.
Odisha’s 'Raja Parba' Festival Celebrating
Published on

ஒடிசா மாநிலத்தின் மிக முக்கிய மற்றும் பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்றான 3 நாட்கள் கொண்டாடப்படும் 'ராஜா பர்பா' திருவிழா நேற்று மாநிலம் முழுவதும் கோலாகலமாகத் தொடங்கியது. பருவமழையின் வருகையை வரவேற்கும் விதமாகவும், பெண்மை மற்றும் பூமித்தாயின் செழுமையைக் கொண்டாடும் விதமாகவும் இந்தத் திருவிழா ஆண்டுதோறும் ஜூன் மாதம் கொண்டாடப்படுகிறது.

'ராஜா' என்ற வார்த்தை சமஸ்கிருத சொல்லான 'ராஜஸ்வலா' (மாதவிடாய்) என்பதிலிருந்து உருவானதாகும். பாரம்பரிய நம்பிக்கைகளின்படி, இந்த 3 நாட்களும் பூமித்தாய் தனது மாதாந்திர ஓய்வு காலத்தில் இருப்பதாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக, பூமித்தாய்க்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த 3 நாட்களும் ஒடிசாவில் உழவு செய்தல், தோண்டுதல் போன்ற எந்தவொரு விவசாயப் பணிகளும் செய்யப்பட மாட்டாது. நிலத்திற்கு முழுமையான ஓய்வு அளிக்கப்படுகிறது.

இந்தத் திருவிழா முழுவதும் பெண்களை மையப்படுத்தியே அமைகிறது. வீட்டில் உள்ள பெண்களுக்கு அன்றாட வீட்டு வேலைகளில் இருந்து முழுமையாக ஓய்வு அளிக்கப்படுகிறது. மரங்களில் கயிறுகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய ஊஞ்சல்கள் கட்டப்பட்டு, பெண்கள் புத்தாடை உடுத்தி, பாரம்பரிய 'ராஜா கீதா' நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியபடி மகிழ்ச்சியாக ஊஞ்சலாடுவார்கள். பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்கள் கால்களில் மருதாணி பூசி தங்களை அழகுபடுத்திக் கொள்வர்.

திருவிழாவின் மற்றொரு முக்கிய அம்சம் அதன் சுவையான பாரம்பரிய உணவுகள் ஆகும். அரிசி மாவு, வெல்லம், தேங்காய் மற்றும் ஏலக்காய் கொண்டு சுடப்படும் 'போடா பிதா' என்ற பாரம்பரிய கேக் இந்த விழாவின் பிரத்யேக உணவாகும். இது தவிர மந்தா பிதா, சகுலி பிதா மற்றும் விசேஷமாகத் தயாரிக்கப்படும் வெற்றிலை ஆகியவை மக்களுக்குப் பரிமாறப்படுகின்றன.

இந்தத் திருவிழா நான்கு நாட்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, முதல் நாளான நேற்று திருவிழாவின் தொடக்கமாக 'பகிலி ராஜா' கொண்டாடப்படுகிறது. இன்று சூரியன் மிதுன ராசிக்கு மாறும் நாள் என்பதால் 'மிதுன சங்கராந்தி' கொண்டாடப்படுகிறது. நாளை 'பூமித்தாயின் இறுதி ஓய்வு நாளாக கருதப்படுகிறது. நாளை மறுநாள் 'வசுமதி ஸ்நானா' என அழைக்கப்படும், பூமித்தாய்க்கு மற்றும் வீட்டில் உள்ள அம்மிக்கல்லுக்கு மஞ்சள் பூசி, முறைப்படி புனித நீராட்டி திருவிழா நிறைவு பெறும்.

இயற்கையோடு இணைந்த வாழ்வையும், பெண்மையின் உன்னதத்தையும் பறைசாற்றும் இந்த 'ராஜா பர்பா' திருவிழாவை ஒடிசா மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com