முதல் முறையாக கடலை பார்த்த 80 வயது தந்தை.. அழைத்து வந்த மகன் பகிர்ந்த வீடியோ - நெட்டிசன்கள் நெகிழ்ச்சி

80 வயதில் என் தந்தையின் முகத்தில் இந்தச் சிரிப்பைக் காண்பதே எங்கள் மிகப்பெரிய பொக்கிஷம்
வீடியோ
வீடியோ
Published on

ஒடிசாவில் கடற்கரைக்கு தனது 80 வயது தந்தையை அழைத்து வந்த மகன் ஒருவர், அவருக்குக் கடலை முதன்முறையாக காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒடிசா

ஒடிசா மாநிலம் கோணார்க்கில் புகழ்பெற்ற சந்திரபாகா கடற்கரை அமைந்துள்ளது.

இங்கு ஸ்ரீகாந்த் என்ற நபர், வாழ்நாள் முழுவதும் கடலையே பார்த்திராத தனது 80 வயது தந்தையை அழைத்துச் சென்றுள்ளார். கடலை முதல் முறை பார்க்கும் தந்தையை படம்பிடித்து அந்த வீடியோவை ஸ்ரீகாந்த் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

வீடியோ

அந்த வீடியோவில், 80 வயதில் முதன்முறையாக கடலைப் பார்த்த அந்தப் பெரியவர், சிறு குழந்தையின் மகிழ்ச்சியோடும் ஆச்சரியத்தோடும் அலைகளை பார்த்த வண்ணம் இருக்கிறார்.

மேலும், கடலைத் தொட்டு வணங்கித் தனது மரியாதையைச் செலுத்திய தருணம் காண்போரைக் நெகிழ்ச்சி செய்துள்ளது.

"இது எனது வாழ்க்கையின் பொன்னான தருணம். 80 வயதில் என் தந்தையின் முகத்தில் இந்தச் சிரிப்பைக் காண்பதே எங்கள் மிகப்பெரிய பொக்கிஷம்" என மகன் ஸ்ரீகாந்த் பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் நெகிழ்ச்சி

இந்த வீடியோ 4.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று நெட்டிசன்களை கவர்ந்து வருகிறது.

"கடல் கூட இன்று மகிழ்ச்சியடைந்திருக்கும், முதல்முறையாக ஒருவர் காலால் மிதிக்காமல், கைகளால் தொட்டு வணங்கி அதற்கு மரியாதை செலுத்தியுள்ளார்" என ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.

"இயற்கையைத் தெய்வமாக மதித்து வணங்கும் அந்தப் பெரியவரின் செயல் இயற்கையின் மதிப்பை உணர்த்துகிறது" என மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.

இவ்வளவு அன்பைப் பொழியும் மக்களின் கருத்துக்களை தனது தந்தைக்கு படித்துக் காண்பித்து அவரையும் மகிழ்ச்சியடைய செய்வதாக ஸ்ரீகாந்த் நன்றியுடன் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com