

தேசிய தேர்வு முகமை (NTA), நீட் (NEET-UG 2026) தேர்வின் போலியான மற்றும் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்ட OMR விடைத்தாள்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதற்கு எதிராக மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சமூக வலைதளங்களில் சில மாணவர்களின் "சரியான OMR விடைத்தாள்கள்" எனக் கூறி சில படங்கள் வைரலாகி வருகின்றன. ஆனால், அந்த படங்கள் அனைத்தும் டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI/OCR) தொழில் நுட்பத்தின் மூலம் போலியாக உருவாக்கப்பட்டவை என NTA திட்டவட்டமாக மறுத்துள்ளது.
சர்ச்சைக்குரிய மாணவர்களின் தேர்வுப் பதிவேடுகள் மற்றும் அசல் OMR விடைத்தாள்களை ஆய்வு செய்ததில், அவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் முற்றிலும் சரியானவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பகிரப்படும் படங்களில் கூடுதல் விடைகள் குறிக்கப்பட்டது போலவும், வினாத்தாள் விவரங்கள் மற்றும் அறை கண்காணிப்பாளரின் கையொப்ப நேரம் மாற்றப்பட்டது போலவும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
அசல் OMR விடைத்தாள்கள் ஏற்கனவே மாணவர்களின் மின்னஞ்சல் மற்றும் அதிகாரப்பூர்வ லாகின் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக NTA தெளிவுபடுத்தியுள்ளது.
அசல் OMR விடைத்தாள்கள் குறைந்த தெளிவுத்திறன் கொண்டவை, ஆனால் போலி OMR தாள்கள் உயர் தெளிவுத்திறன் கொண்டவையாகவும், பேனா மை நிறம் கருப்பிலிருந்து நீல-ஊதா நிறமாக மாற்றப்பட்டும் உள்ளன. AI தொழில்நுட்பத்தைக் கொண்டு எழுத்துக்களை மீண்டும் உருவாக்க முயன்றதில், OMR தாளில் உள்ள அச்சிடப்பட்ட வாக்கியங்களில் பிழைகள் ஏற்பட்டுள்ளதை NTA நுணுக்கமாகக் கண்டறிந்துள்ளது.
போலியான OMR விடைத்தாள்களை உருவாக்குவது, சமூக வலைதளங்களில் பரப்புவது அல்லது முறையீட்டிற்காக சமர்ப்பிப்பது சட்டப்படி குற்றமாகும். இதன் மீது கீழ் கண்ட சட்டங்களின் கீழ் கடுமையாக வழக்குப்பதிவு செய்யப்படும் என NTA எச்சரித்துள்ளது:
1. பொதுத் தேர்வுகள் (நடைமுறை முறைகேடுகள் தடுப்பு) சட்டம், 2024
2. பாரதிய நியாய சன்ஹிதா, 2023
3. தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000
சமூக வலைதளங்களில் பரவும் போலித் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், மதிப்பெண் வேறுபாடுகள் குறித்த புகார்களுக்கு அசல் OMR நகல்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் NTA கேட்டுக்கொண்டுள்ளது.