

கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வென்றது. இப்போரில் உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீராகளை நினைவு கூரும் வகையில் கார்கில் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இன்று கார்கில் போர் வெற்றி தின நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடந்தது.
லடாக்கின் டிராசில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அப்போது அவர் கார்கில் போர் நினைவிடத்திற்கான இணைய வழித்தளத்தை தொடங்கி வைத்தார். அதன்பின், நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
27-வது கார்கில் வெற்றி தினத்தில் நமது வீரர்களுக்கும், அவர்களின் வீரத்திற்கும் தலை வணங்குகிறேன். கார்கில் வெற்றி என்பது வெறும் ராணுவ மற்றும் ராஜதந்திர வெற்றி மட்டுமல்ல, நமது வீரர்கள் அசைக்கமுடியாத தைரியத்தையும், வீரத்தையும் ஒட்டுமொத்த உலகமும் கண்ட தருணம் ஆகும். கார்கில் வெற்றி, பாரத மாதாவின் கிரீடத்தில் பதிக்கப்பட்ட வைரத்தைப் போன்றது.
பாகிஸ்தான் மேற்கொள்ளும் ஒவ்வொரு தவறான நடவடிக்கைக்கும், அவர்கள் கற்பனை செய்து பார்க்கமுடியாத அளவுக்குக் கடுமையான முறையில் பதிலடி கொடுக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது.
இந்தியா தரவு மையங்களை உருவாக்குகிறது. பாகிஸ்தான் பயங்கரவாத மையங்களை உருவாக்குகிறது. இந்தியா புதுமைகளைப் பின்தொடர்கிறது. பாகிஸ்தான் ஊடுருவலுக்கான புதிய வழிகளைத் தேடுகிறது.
இந்தியா கப்பல்களை வடிவமைக்கிறது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வடிவமைப்பதில் ஈடுபட்டுள்ளது. இந்தியா ஒரு ஸ்டார்ட்அப் சூழலை உருவாக்கும்போது, பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத சூழலை உருவாக்குகிறது.
இந்தியா செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பும்போது, பாகிஸ்தான் எல்லை தாண்டி பயங்கரவாதிகளை அனுப்புவதில் ஈடுபட்டுள்ளது.
தற்போது பாகிஸ்தான் பயங்கரவாதத்தைத் தனது அரசு கொள்கையின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளது. அங்கு ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான வேறுபாடு முற்றிலும் மறைந்துவிட்டது. அந்நாட்டு ராணுவம் பயங்கரவாத அமைப்புகளைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல் அவர்களுடன் நெருக்கமாகவும் செயல்படுகிறது.
எனவே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பயங்கரவாதிகளையும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் அரசுகளையும் இந்தியா இனி தனித்தனியாகப் பார்க்காது என்பதை நாங்கள் உணர்த்தினோம்.
எங்கள் நோக்கம் தெளிவாக இருக்கிறது. பாகிஸ்தானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறாது. ஒருவேளை பேச்சுவார்த்தை என்று ஒன்று நடந்தால், அது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே இருக்கும்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தவிர பாகிஸ்தானுடன் வேறு எந்தப் பேச்சுவார்த்தையிலும் இந்தியா ஈடுபடாது என தெரிவித்தார்.