

ஒரு வெளிநாட்டவரின் குடியுரிமை சரிபார்க்கப்படாத நிலையில், அவரது சொந்த நாடு அவரது குடியுரிமையை உறுதிசெய்து அவரை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டாலன்றி, அவரை நாடு கடத்த முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நாடு கடத்தப்படுவதற்கு உடனடி வாய்ப்பு இல்லாதபோதிலும், அசாமில் வெளிநாட்டினர் என அறிவிக்கப்பட்டவர்கள் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மத்திய உள்துறை அமைச்சகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு கூறுகையில், “தேசியம் சரிபார்க்கப்படாத ஒரு வெளிநாட்டவரை, அவரது தேசியம் உறுதிசெய்யப்பட்டாலோ, செல்லுபடியாகும் பயண ஆவணம் வைத்திருந்தாலோ, அல்லது சம்பந்தப்பட்ட தாய்நாட்டின் ஏற்பு கிடைத்தாலோ மட்டுமே அவரது தாய் நாட்டிற்கு நாடு கடத்த முடியும்.
தேசிய சரிபார்ப்பு இல்லாமல் நாடு கடத்தும் நடைமுறையைத் தொடங்க முடியாது. ஒரு வெளிநாட்டவர், செல்லுபடியாகும் பயண ஆவணம் அல்லது கடவுச்சீட்டை வைத்திருந்தாலோ மற்றும் வேறு எந்தக் குற்ற வழக்கும் நிலுவையில் இல்லாவிட்டாலோ,
தண்டனைக் காலம் அல்லது நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்த பிறகு, சம்பந்தப்பட்ட மாநிலம், யூனியன் பிரதேசம் அல்லது வெளிநாட்டினர் மண்டலப் பதிவு அலுவலகத்தால் அவரை நாடு கடத்த முடியும்.
ஒருவரை நாடு கடத்துவதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரகம் அல்லது உயர் ஆணையத்திடம் இருந்து குடியுரிமை சரிபார்ப்பு செயல்முறையின் மூலம் தேவையான பயண ஆவணத்தைப் பெறுவது அவசியம்,” என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.