தேர்வு முறைகேட்டில் ஈடுபடும் நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 கோடி அபராதம்

புதிய சட்டத்திருத்த மசோதா பாராளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.
New amendment bill proposes 10-year jail and ₹10 crore fine to curb public exam malpractice
Published on

தேசிய அளவிலான அரசு போட்டித்தேர்வுகளில் வினாத்தாள் கசிய விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், புதிய சட்டத்திருத்த மசோதா பாராளுமன்ற மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தாக்கல் செய்ய உள்ளார்.

கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் கொண்டு வரப்பட்ட பொதுத்தேர்வு முறைகேடுகளை தடுக்கும் வகையில் பழைய சட்டம் திருத்தங்கள் செய்யப்பட உள்ளது.

இதன்மூலம் பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவது உறுதி செய்யப்பட உள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சர்கள் கூட்டத்தில், பொதுத்தேர்வு முறைகேடுகளை தடுக்கும் ‘2026 சட்டத்திருத்த மசோதா’ என்ற வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

2026 பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா:

இந்த மசோதா மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு எம்.பி.க்களுக்கு மசோதாவின் நகல் நேற்று விநியோகிக்கப்பட்டது. அதில் கூறி இருப்பதாவது:-

வினாத்தாள் கசிவு அல்லது தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதிக பட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவோருக்கான தண்டனை 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தப்படும். தனி நபர் குற்றங்க ளுக்கான அபராத தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்படும்.

வினாத்தாள் கசிவை தொடர்ந்து செய்யும் கும்பல்களுக்கு குறைந்தபட்ச தண்டனை 5 ஆண்டில் இருந்து 7 ஆண்டுகளாக உயர்த்தப்படும். இவர்களுக்கான குறைந்தபட்ச அபராதம் ரூ.1 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்த்தப்படும்.

தேர்வு நடத்துதல், வினாத்தாள் அச்சிடுதல், கணினி தொழில்நுட்ப ஆதரவு போன்ற பணிகளில் ஈடுபடும் தனியார் ஏஜென்சிகளுக்கு ரூ.5 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.

அந்நிறுவனம் பொதுத் தேர்வுகளை நடத்த விதிக்கப்படும் தடைக்காலம் இரட்டிப்பாக்கப்படும். அதாவது 8 ஆண்டுகள் வரை பொதுத் தேர்வு நடத்த தடை விதிக்கப்படும்.

நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது உறுதியானால், அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 கோடி அபராதமும் விதிக்கப்படும்.

வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் காவல்துறை அல்லது மத்திய புலனாய்வு அமைப்புகள் 2 மாதங்களில் வழக்கை முடிக்க கால வரையறை நிர்ணயிக்கப்படும்.

வினாத்தாள் கசிவு அல்லது தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணையை விரைந்து மேற்கொள்ள வசதியாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்.

விரைவு நீதிமன்றங்கள் மூலம் விசாரணை:

இந்த விரைவு நீதிமன்றங்களில் வழக்கின் மீது உடனடியாக விசாரணையை தொடங்கி, தினசரி அடிப்படையில் மேற்கொள்வதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த 3 மாதங்களுக்குள் விசாரணை முடிக்கப்பட வேண்டும்.

வினாத்தாள் கசிவு தேர்வு முறைகேடு குற்றங்களை விரைந்து விசாரிப்பதற்காக எந்தவொரு அமர்வு நீதிமன்றத்தையும் சிறப்பு விரைவு நீதிமன்றமாக மாற்றியமைக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்த சட்டத்திருத்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.

விரைவு நீதிமன்றங்களின் தீர்ப்பை எதிர்த்து, ஐகோர்ட்டின் 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மேல் முறையீடு செய்யலாம். அந்த மேல்முறையீட்டு மனுக்களும் 3 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். மேற்கண்ட சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த மசோதா நகலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com