ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடியை 'கோமிய நிபுணர்' என விமர்சித்த பிரியங்கா காந்திக்கு 215 கல்வியாளர்கள் கண்டன கடிதம்

மோடி அமைத்த தேர்வு முறைகேடுகளை ஆராயும் உயர்மட்ட குழுவில் ஒரு 'கோமிய நிபுணர்' கூட சேர்க்கப்பட்டுள்ளார்
பிரியங்கா காந்தி, காமகோடி
பிரியங்கா காந்தி, காமகோடி
Published on

பசுவின் சிறுநீரில் (கோமியத்தில்) மருத்துவ குணம் உள்ளதாக ஐ.ஐ.டி மெட்ராஸ் இயக்குநர் வி. காமகோடி பேசியது சர்ச்சையாகி இருந்தது. அது தற்போது மீண்டும் விவாதப்பொருளாகி உள்ளது.

காமகோடி

2025இல் சென்னையில் நடைபெற்ற பொங்கல் விழாவின் போது, சன்னியாசி ஒருவர் காய்ச்சலின் போதுகோமியம் அருந்தி குணமடைந்ததாக அறிவியல் ஆய்வுக் கட்டுரையில் தாம் படித்ததாக மேற்கோள்காட்டி பேசியிருந்தார்.

உயர்மட்ட குழு

இதனிடையே நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக சிஜேபி தலைமையில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக பல மாதங்களுக்கு பின் மௌனம் கலைத்த பிரதமர் மோடி, இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, தேர்வு முறைகேடுகளை தடுப்பது குறித்து ஆராய இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நீலகேனி தலைமையில் உயர்மட்ட குழு ஒன்றை அமைப்பதாக அறிவித்தார். இதில் முன்னாள் இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்ட 6 பேர் இடம்பெற்றுள்ளனர்.

குறிப்பாக இதில் ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமக்கோடியும் இடம்பெற்றுள்ளார்.

பிரியங்கா

மக்களவையில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வுச் சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி "புதிய குழுக்களை அமைப்பதால் மட்டும் எந்தப் பயனும் இல்லை. தேர்வுச் சீர்திருத்தங்களுக்காக அமைக்கப்பட்ட புதிய குழுவில், ஒரு ஐடி நிறுவன உரிமையாளர் மற்றும் ஒரு 'கோமிய நிபுணர்' கூட சேர்க்கப்பட்டுள்ளார்" என்று விமர்சித்திருந்தார்

இந்நிலையில் பிரியங்கா காந்தி, காமகோடி குறித்து தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து 215 கல்வியாளர்கள் அவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கடிதம்

பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், முன்னாள் துணைவேந்தர்கள் மற்றும் மூத்த பேராசிரியர்கள் உட்பட 215 கல்வியாளர்கள் பிரியங்கா காந்திக்கு எழுதியுள்ள இந்த கடிதத்தில்,

"இந்தியாவின் முன்னணி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவராக பேராசிரியர் வி. காமகோடி விளங்குகிறார்.

ஒரு கல்வியாளராகத் தனது கருத்துகளையோ அல்லது பாரம்பரிய அறிவைப் பற்றிய உரையாடல்களையோ முன்வைக்க அவருக்கு முழு உரிமை உண்டு.

ஒரு அறிஞரின் கருத்துகளை ஆரோக்கியமாக விவாதிப்பதற்குப் பதிலாக, இப்படிப்பட்ட முத்திரைகளைக் குத்தி அவரை நிராகரிப்பது, நாட்டின் அரசியலமைப்பு வலியுறுத்தும் Scientific Temper-ஐ சீர்குலைக்கும் செயலாகும். எள்ளல் பேச்சுக்கள் ஒருபோதும் நியாயமான உரையாடலுக்கு மாற்றாக முடியாது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com