30 வருடங்கள் முன் வினாத்தாள் கசிவை எதிர்த்துப் போராடி போலீஸ் தாக்குதலில் காயமுற்ற தர்மேந்திர பிரதான்.. இன்று அதே சர்ச்சையில்!

எங்களுடன் சுமார் 1,500 மாணவர்கள் திரண்டனர்.
தர்மேந்திர பிரதான்
தர்மேந்திர பிரதான்
Published on

நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தொடர் தேர்வு முறைகேடுகளால் நிர்வாக தோல்விக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி டெல்லியில் சிஜேபி கட்சி தலைமையில் இளைஞர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர்.

கல்வியாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டம் 25வது நாளை எட்டியுள்ளது. கடந்த ஜூலை 20 பாராளுமன்றம் நோக்கி பேரணி சென்ற இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் அடக்குமுறையில் ஈடுபட்டது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சுமார் 60 போராட்டக்காரர்கள் காயமுற்றனர்.

இதனால் மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்து வரும் சூழலில் தர்மேந்திர பிரதானே ஒரு காலத்தில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடி காவல்துறை தாக்குதலில் காயமுற்றவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

போராட்டம்

1990களில் பாஜகவின் மாணவர் அமைப்பான பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பின் மாணவர் தலைவராக தர்மேந்திர பிரதான் இருந்தார்.

1994 முதல் 1997 வரை அவர் இரண்டு முறை ஏபிவிபி அமைப்பின் தேசியச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.

1997 இல் ஒடிசாவில் ஜானகி வல்லப் பட்நாயக் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற போது.

அங்குள்ள உயர்கல்வித் தேர்வுகளில் வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்தன. அதை எதிர்த்து மாநில தலைமைச் செயலகம் மற்றும் முதலமைச்சர் இல்லம் அருகே நடைபெற்ற பிரம்மாண்ட மாணவர் போராட்டத்தில் தர்மேந்திர பிரதான் முன்னின்று பங்கேற்றார்.

புவனேஸ்வரில் உள்ள RMD கல்லூரியின் தற்போதைய முதல்வரும், அன்று தர்மேந்திர பிரதானின் ஜூனியராகப் போராட்டத்தில் பங்கேற்றவருமான ராவ் என்பவர் அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார்.

அவர் கூறுகையில், "அன்று ஒடிசா அரசுக்கு எதிராகப் போராட நாங்கள் தலைமைச் செயலகத்திற்குச் சென்றோம். எங்களுடன் சுமார் 1,500 மாணவர்கள் திரண்டனர். அமைதியான முறையில் போராட்டம் நடத்திய எங்கள் மீது காவல்துறையினர் கடுமையான தடியடி நடத்தினார்கள். அந்தத் தடியடியில் தர்மேந்திர பிரதானும் காயமடைந்தார்." என்று தெரிவித்தார்.

அன்று வினாத்தாள் கசிவை எதிர்த்துத் தடியடி வாங்கிய மாணவர் தலைவரான தர்மேந்திர பிரதான், இன்று நாட்டின் கல்வி அமைச்சராகப் பொறுப்பில் இருக்கும் போது அதே வினாத்தாள் கசிவுப் புகாரில் அவருக்கு எதிராகவே போராட்டம் நடைபெறுவது நகைமுரணமாக பார்க்கப்படுகிறது.

ஒரு காலத்தில் தான் எதற்காகப் போராடினாரோ, இன்று அதே விவகாரத்தில் பொறுப்பேற்காமல் அவர் இருந்து வருவதும் பலராலும் ஒப்பப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com