அரசியல் வாரிசு.. ஏபிவிபி முதல் மத்திய கல்வி அமைச்சர் வரை - யார் இந்த தர்மேந்திர பிரதான்?

2021 ஜூலை மாதம் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார்.
தர்மேந்திர பிரதான்
தர்மேந்திர பிரதான்
Published on

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அண்மையில் நடந்து முடிந்த நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய அழுத்தம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துத் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டது தேசிய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

இதில் 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் நேற்று போலீசாரால் தூக்கிச் செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அழுத்தம் இருந்தபோதிலும் தர்மேந்திர பிரதான் தொடர்ந்து கல்வி அமைச்சராக நீடித்து வருகிறார். இந்த சூழலில் பாஜக அவருக்கு அளிக்கும் முக்கியத்துவத்தின் பின்னணி குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.

தர்மேந்திர பிரதான்

1969, ஜூன் 26 அன்று ஒடிசாவின் தால்செர் பகுதியில் பிறந்த தர்மேந்திர பிரதான், முன்னாள் மத்திய அமைச்சர் தேவேந்திர பிரதானின் மகன் ஆவார்.

பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் ஏபிவிபி மூலமாக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

அரசியல் பயணம்

2004ம் ஆண்டு ஒடிசாவின் தியோகர் தொகுதியிலிருந்து முதன்முறையாக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர், 2012ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்திய ஆட்சியை பொறுப்பேற்றதிலிருந்து, தர்மேந்திர பிரதான் மத்திய அமைச்சரவையில் முக்கியமான தூணாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

2014 - 2021 வரையிலான காலகட்டத்தில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சராக பணியாற்றினார்.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே அந்த துறையில் நீண்டகாலம் அமைச்சராக பதவி வகித்த பெருமை இவருக்கு உண்டு. இக்காலகட்டத்தில் எக்குத் துறையின் கூடுதல் பொறுப்பையும் அவர் கவனித்துக்கொண்டார்.

கல்வி அமைச்சர்

2021 ஜூலை மாதம் மத்திய கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார். 2024 தேர்தலில் ஒடிசாவின் சம்பல்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரான அவர் மீண்டும் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்று தற்போது வரை அந்த பதவியில் நீடித்து வருகிறார்.

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்க அழுத்தம் கொடுக்கும் வகையில் மத்திய அரசு கல்வி நிதியை முடக்கியது. இந்த சமயத்தில் தர்மேந்திர பிரதான், திமுக அரசு, அரசியலுக்காக மும்மொழிக் கொள்கையை எதிர்க்கிறது என கூறி தொடர் வார்தைப்போரில் ஈடுபட்டார்.

பேரணி

நீட் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி என பல்வேறு தேர்வு குளறுபடிகள் இவரின் நிர்வாக தோல்வியால் நடந்தவை என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைத்து வந்தபோதிலும் தர்மேந்திர பிரதான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நாளை பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்த இருந்த பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் ஒட்டுமொத்த இந்தியக் கல்வித் துறையையும் உலுக்கியுள்ள நிலையில் தேசிய தேர்வு முகமையை முறையாகக் கண்காணிக்கத் தவறியதாகக் கூறி தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com