

நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது.
இதில் லடாக்கை சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் விஞ்ஞானி சோனம் வாங்சுக் கலந்துகொண்டார்.
போராட்ட களத்தில் உரையாற்றிய அவர், "எனக்கு தனிப்பட்ட முறையில் போராட்டங்கள் நடத்துவதில் விருப்பமில்லை.
ஆனால், நீதிக்காகப் போராடும் இந்த மாணவர்களின் பக்கமும், நியாயத்தின் பக்கமும் நிற்க வேண்டியது எனது தவிர்க்க முடியாத கடமை என்று கருதினேன்.
நாட்டின் தற்போதைய கல்வி முறையில் மிக அடிப்படையான மற்றும் கட்டமைப்பு ரீதியிலான மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டியது அத்தியாவசியமானது.
அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் உயர் அரசு அதிகாரிகளின் பிள்ளைகள் அனைவரும் கட்டாயம் அரசு பள்ளிகளிகள் மற்றும் கல்லூரிகளிலேயே படிக்க வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்.
அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள், நாட்டின் சாதாரண சாமானிய குடிமக்களுக்குக் கிடைக்கும் அதே கல்வி உள்கட்டமைப்பை அனுபவிக்கும் போதுதான், அரசுப் பள்ளிகளின் தரம் தானாக உயரும் என்றும், இது கல்வித்துறையில் பெரிய நேர்மறையான சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கும்" என்று தெரிவித்தார்.
அவர் பேசும்போது அங்கிருந்த இளைஞர்கள், "சோனம் வாங்சுக் நாட்டின் கல்வி அமைச்சராக வேண்டும்" என்று முழக்கங்களை எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், "எனக்கு எவ்வித அரசியல் ஆசையோ அல்லது லட்சியமோ கிடையாது. நான் அரசியலுக்கு வர விரும்பவில்லை; மாறாக, நம் நாட்டின் இளம் தலைமுறையினரே எதிர்காலத்தில் இந்த நாட்டின் பொறுப்புகளைத் கையில் எடுத்து வழிநடத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என தெரிவித்தார்.
முன்னதாக வினாத்தாள் கசிவு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு இந்தப் போராட்டத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.