நீட் போராட்டம் வழக்கு: ரஷியாவில் இருக்கும் என் மீது எப்.ஐ.ஆர்.- பீகாரை சேர்ந்தவரின் வீடியோவால் காவல்துறை அதிர்ச்சி

டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு ஆதரவாக பீகாரில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பீகார் மாணவர்கள் போராட்டம்
பீகார் மாணவர்கள் போராட்டம்
Published on

நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கிய போராட்டத்திற்கு மாணவர்கள், இளைஞர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

மாணவர்கள் மீது தாக்குதல்

கடந்த 20-ந்தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் வகையில் பேரணியாக சென்றனர். அப்போது மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக் குண்டுகள் மற்றும் பெல்லட் குண்டுகள் மூலமாகவும் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பீகாரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். மேலும், வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தர்மேந்திர பிரதான் ராஜினாமா

டெல்லியில் போராட்டம் அதிகரிக்க, தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன், மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கோரிக்கை வைத்தனர். அதையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. பீகார் மாநில அரசும் மாணவர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெற முடிவு செய்துள்ளது.

ரஷியாவில் இருக்கும் எனது பெயரில் FIR

இதற்கிடையே முகமது சதகத் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு (FIR) செய்துள்ளனர். ஆனால், முகமது சதகத் 4 மாதத்திற்கு முன்னதாகவே ரஷியா சென்றுள்ளார். தற்போது அவர் ரஷியாவில்தான் இருக்கிறார். ரஷியாவில் இருக்கும் நான் எப்படி 25-ந்தேதி பஹதுர்கஞ்ச் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொள்ள முடியும்? என்று வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும். அதிகாரிகள் என்னுடைய பெயரை FIR-ல் இருந்து நீக்க வேண்டும் என்றார்.

இது தொடர்பாக பி.டி.ஐ. நிறுவனம், கிஷன்கஞ்ச் எஸ்.பி. ஹரி மோகன் சுக்லாவிடம் கேள்வி எழுப்பியது, அதற்கு "போராட்டங்கள் தொடர்பான குறைகள் ஏதேனும் உள்ளவர்கள், தீர்வு காண்பதற்காகக் காவல்துறையை அணுகலாம்" என்றார்.

பீகார் மாநிலத்தில் 25-ந்தேதி போராட்டம் தொடர்பாக 694 பேரை கைது செய்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் மைனர் ஆவார்கள்.

போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களும் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள் என்று காவல்துறை சார்பில் தெரிவித்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com