

இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூட்டத்தை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி மற்றும் மூத்த மத்திய அமைச்சர்கள் தலைமையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி, தேசியவாதக் குடிமக்கள் கட்சியில் இணைந்த 20 எம்பிக்களும் முதன்முறையாக அதிகாரப்பூர்வ அழைப்பாளராகப் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்ற பின் பேசிய அதிருப்தி எம்.பி. சயோனி கோஷ், "பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டம் மிகவும் பயனுள்ளதாகவும், புதிய தகவல்களைத் தருவதாகவும் இருந்தது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து இதில் விரிவாகவும் நேர்மறையாகவும் விவாதிக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.
மேலும், அன்று பிற்பகலில் விவாதத்திற்கு வரவுள்ள பொதுத் தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா 2026க்கு அனைவரும் கட்சி வேறுபாடின்றி ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
என்டிஏ கூட்டத்தில் பங்கேற்றது குறித்துப் பேசிய NCPI தலைவர் காகோலி கோஷ் தஸ்திதார், "வரலாற்றிலேயே முதன்முறையாக NCPI எம்பிக்களான எங்களுக்கு என்டிஏ-வின் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. சுவேந்து அதிகாரி தலைமையில் மேற்கு வங்கத்தில் முதல் முறையாக பாஜக அரசு அமைந்தது.
இதனிடையே தோல்வியால் திரிணாமுல் காங்கிரசில் பலர் அதிருப்தி அடைந்தனர். நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற 80 பேரில் 50க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தனி அணியாக பிரிந்து ரிதர்ப்பா பானர்ஜி தலைமையில் செயல்பட்டு வருகின்றனர். ரிதர்பாவையே அம்மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான சபாநாயகர் அங்கீகரித்தார்.
இதனிடையே எம்எல்ஏ மட்டத்தில் இருந்த அதிருப்தி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்களையும் பீடித்தது. அடுத்தடுத்து பலர் விலகிய நிலையில் 20 திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பிக்கள் கட்சித் தாவல் தடைச் சட்ட சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக தேசியவாத குடிமக்கள் கட்சியில் (NCPI) என்ற பிராந்திய கட்சி ஒன்றில் சேர்ந்து பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு ஆத்ராவளித்தனர்.