திறந்து 2 நாட்களில் இப்படியா?.. ரூ.248 கோடி செலவு வேஸ்ட் - மும்பை மேம்பாலத்தால் மக்கள் ஷாக்

அதிகாரிகளின் இந்த விளக்கத்தால் வாகன ஓட்டிகள் மேலும் அதிருப்தியடைந்தனர்.
திறந்து 2 நாட்களில் இப்படியா?..  ரூ.248 கோடி செலவு வேஸ்ட் - மும்பை மேம்பாலத்தால் மக்கள் ஷாக்
Published on

மும்பையின் மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக, கோரேகான் பகுதியில் உள்ள மிருணாள்தாய் கோரே மேம்பாலம் அண்மையில் ரூ.248 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

இது கடந்த ஜூன் 6 அன்று மும்பை மேயரால் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.

விரிசல்கள்

ஆனால், பாலம் திறக்கப்பட்ட இரண்டு நாட்களிலேயே அதன் மேற்பரப்பில் உள்ள தார் உருகி, சாலையில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டன.

குறிப்பாக, பாலத்தின் மீது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றின் ஸ்டாண்ட் தார் சாலையைத் துளைத்துக் கொண்டு ஆழமாக உள்ளே இறங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகள் மும்பை மாநகராட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.

விளக்கம்

ஆனால் இதற்கு விளக்கம் அளித்த மாநகராட்சி, "இந்த மேம்பாலத்தில் 'மாஸ்டிக் அஸ்பால்ட்' எனப்படும் தார் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

புதிய தார் சாலை என்பதால் ஆரம்பத்தில் இப்படி மென்மையாக இருப்பது இயல்பானதுதான். இதன் மீது வாகனங்கள் தொடர்ந்து செல்லச் செல்ல, அழுத்தம் காரணமாகச் சாலை தன்னிச்சையாகவே இறுகி, சமதளமாக மாறிவிடும்," என்று தெரிவித்துள்ளது.

ஆய்வு

மாநகராட்சி அதிகாரிகளின் இந்த விளக்கத்தால் வாகன ஓட்டிகள் மேலும் அதிருப்தியடைந்தனர். சர்ச்சை வலுத்ததைத் தொடர்ந்து, மும்பை மாநகராட்சி மேயர் ரீத்து தாவ்டே மேம்பாலப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

சாலையின் தரக்குறைபாடுகளை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்றும், பணிகளில் தொய்வு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com