

மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக மெய்தேய் - குக்கி இனக்குழுக்கக்கு இடையே கலவரம் வெடித்தது.
பெண் ஒருவர் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
மேலும் இந்த கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கூட்டுப் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட அவலங்களும் அரங்கேறின.
மக்கள் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்னும் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளன.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமலனது. இந்தாண்டு பிப்ரவரியில் ஜனாதிபதி ஆட்சி முடிந்து மீண்டும் பாஜக பொறுப்பேற்றது.
இருப்பினும் மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை. ஆயுத குழுக்களின் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது.
முகாம்களில் வாழும் மக்கள் பல நேரங்களில் அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் பற்றாக்குறையால் மோசமான சூழ்நிலைகளில் வாழ்ந்து வருகின்றனர்.
வேலைவாய்ப்பு, சிறார்களின் கல்வி ஆகியவையும் நிச்சயமற்ற சூழலில் முடங்கியுள்ளது.
இந்நிலையில் மணிப்பூரில் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு நிவாரண முகாம்கள் மற்றும் தற்காலிகப் புனர்வாழ்வு மையங்களில் தஞ்சம் புகுந்திருந்தவர்களில் இதுவரை குறைந்தது 731 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
கடந்த 2023 கலவரம் நடந்து முடிந்ததற்கு பிற்பாடிருந்து இத்தனை உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
ஹரேஷ்வர் கோஸ்வாமி என்ற ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு மணிப்பூர் தகவல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் மாநில உள்துறை அமைச்சகம் இந்த தரவுகளை வழங்கியுள்ளது.
உயிரிழப்புகள்
மாவட்ட நிர்வாகங்கள் சேகரித்துள்ள புள்ளிவிவரங்களின்படி, வன்முறையால் இடம்பெயர்ந்து மாநிலத்தின் 9 மாவட்டங்களில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கியிருந்தவர்களில்,
அதிகபட்சமாக சுராசந்த்பூரில் 248 பேர் உயிரிழந்துள்ளனர், பிஷ்ணுபூரில் 151 பேர், காங்போக்பியில் 128 பேர், இம்பால் மேற்கில் 94 பேர், காக்சிங் 60 பேர், இம்பால் கிழக்கில் 25 பேர், ஜிரிபாம்மில் 13 பேர், தௌபால் 11 பேர், தெங்னௌபால் ஒருவர் உயிரிழந்துள்ளனர்
உடல்நலக்குறைவு, மன அழுத்தத்தால் தற்கொலை, மருத்துவ உதவி கிடைக்காமல் மரணம் ஆகிய வெவ்வேறு காரணங்களால் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
குறிப்பாக இம்பால் மேற்கு மாவட்டத்தில் முகாமில் இரண்டு பேர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்; ஒருவர் அதிகப்படியான போதைப்பொருள் உட்கொண்டதாலும், மற்றொருவர் துப்பாக்கிக் குண்டுக் காயத்தினாலும் உயிரிழந்துள்ளனர்.
முகாம் வாழ்க்கை
ஆர்டிஐ தரவுகளின்படி, கலவரம் வெடித்து இத்தனை மாதங்கள் கடந்த நிலையிலும், 43,000க்கும் அதிகமான மக்கள் இன்னும் தங்களது சொந்த வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் முகாம்களிலேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களில் காங்போக்பி மாவட்டத்தில் மிக அதிகப்படியாக 15,694 மக்கள் முகாம்களில்தங்கியுள்ளனர்.
அடுத்தபடியாக பிஷ்ணுபூரில் 10,092 பேரும், சுராசந்த்பூரில் 6,365 பேரும் இன்னமும் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
நிவாரண முகாம்களில் போதிய மருத்துவ வசதிகள் மற்றும் ஊட்டச்சத்து இல்லாததால், இம்பால் மேற்கு மாவட்டத்தில் மட்டும் 217 அகதிகள் நாள்பட்ட அல்லது குணப்படுத்த முடியாத கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் இம்பால் கிழக்கில் 41 பேரும், பிஷ்ணுபூரில் 26 பேரும் இத்தகைய கடுமையான நோய் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.