ஸ்விகி, சொமேட்டோ, செப்டோ டெலிவரி நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு - மின்சார வாகனம் கட்டாயம்!

ஒவ்வொரு டெலிவரி கட்டணத்திலிருந்தும் 2% பங்களிப்புத் தொகை ஓட்டுநர்களின் நல வாரியத்திற்குச் செல்லும்.
Electric Vehicles
Electric Vehicles
Published on

ஆன்லைன் உணவு மற்றும் மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யும் முன்னணி நிறுவனங்களான ஸ்விக்கி, சொமாட்டோ மற்றும் செப்டோ போன்ற தளங்களை ஒழுங்குமுறைப்படுத்த மகாராஷ்டிரா அரசு புதிய விதிகளைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.

மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் தலைமையிலான குழு, இதற்கான 'பைக் டாக்ஸி விதிகள் 2025' திருத்த வரைவைச் சட்டத்துறையின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளது.

இந்த புதிய சட்டத் திருத்தத்தின்படி, டெலிவரி நிறுவனங்கள் தங்களது வாகனக் கூட்டமைப்பை முழுமையாக மின்சார வாகனங்களாக மாற்ற வேண்டும் என்றும், ஒவ்வொரு ஆர்டர் கட்டணத்திலிருந்தும் 2% தொகையை ஓட்டுநர்களின் நல நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்படவுள்ளன.

டெலிவரி சேவை வழங்குநர்:

இதுவரை ஓலா, உபெர், ராபிடோ போன்ற பயணியர் பைக் டாக்ஸி சேவைகளுக்கு மட்டுமே மகாராஷ்டிராவில் தனி விதிமுறைகள் இருந்தன.

இனிமேல் பார்சல்கள், உணவுப் பொருட்கள் அல்லது இதர பேக்கேஜ்களை விநியோகம் செய்யும் அனைத்து நிறுவனங்களும் 'டெலிவரி சேவை வழங்குநர்' என்ற புதிய வரம்பிற்குள் கொண்டு வரப்படும்.

இதன் மூலம் ஸ்விக்கி, பிளின்கிட், செப்டோ போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களை மாநில அரசின் போக்குவரத்துத் துறை நேரடியாகக் கண்காணிக்க வழிவகை ஏற்படும்.

புதிய முக்கிய நிபந்தனைகள் என்னென்ன?

இந்த வரைவுச் சட்டம் அங்கீகரிக்கப்பட்ட பின், டெலிவரி நிறுவனங்கள் சில விதிகளைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்.

டெலிவரிக்கு பயன்படுத்தப்படும் அனைத்து பைக்குகளும் மின்சார வாகனங்களாக மட்டுமே இருக்க வேண்டும். அனைத்து டெலிவரி வாகனங்களிலும் ஜிபிஎஸ் டிராக்கர்கள் பொருத்தப்பட வேண்டும்.

வாகனங்களுக்கும் ஓட்டுநர்களுக்கும் முறையான காப்பீடு இருக்க வேண்டும். பிராந்திய போக்குவரத்து ஆணையம் நிர்ணயிக்கும் கட்டண உச்சவரம்பைப் பின்பற்றியே டெலிவரி கட்டணங்கள் வசூலிக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு நிறுவனமும் மாநில அரசிடம் பிரத்யேக உரிம அடையாளச் சான்றைப் பெற வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்துள்ளது.

2% ஓட்டுநர் நல நிதி:

இந்தச் சட்டத்தின் மிக முக்கியமான அம்சமாக, ஒவ்வொரு டெலிவரி கட்டணத்திலிருந்தும் 2% பங்களிப்புத் தொகை ஓட்டுநர்களின் நல வாரியத்திற்குச் செல்லும்.

இந்த நிதியானது ஓட்டுநர்களின் ஓய்வூதியம், விபத்துக் காப்பீடு, மின்சார வாகனக் கடன்கள், குழந்தைகளின் கல்வி உதவித்தொகை போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படும்.

உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை:

அமைச்சர் பிரதாப் சர்நாயக் முன்னதாக சட்டப்பேரவையில் தெரிவித்தபடி, பைக் டாக்ஸி மற்றும் டெலிவரி ஓட்டுநர்கள் அனைவரும் இருப்பிடச் சான்றிதழ் மற்றும் பொது சேவை வாகன பேட்ஜ் வைத்திருப்பது கட்டாயமாக்கப்படும்.

இந்த நடவடிக்கை மாநிலத்தைச் சேர்ந்த உள்ளூர் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று அரசு நம்புகிறது.

தற்போது இந்த நிறுவனங்கள் மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மற்றும் சமூக பாதுகாப்பு குறியீட்டின் கீழ் மட்டுமே இயங்கி வருவதால், ஏதேனும் புகார்கள் எழும்போது மாநில அரசால் தலையிட முடியாமல் இருந்தது.

இந்தப் புதிய கொள்கை ஒப்புதல் பெற்றவுடன், 15 கிலோமீட்டர் வரையிலான அனைத்து பைக் டெலிவரி பயணங்களுக்கும் இந்த விதிகள் முழுமையாகப் பொருந்தும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com