மத்தியப் பிரதேசத்தில் பொது சிவில் சட்டம்.. அமைச்சரவை ஒப்புதல் - இன்று சட்டமன்றத்தில் தாக்கல்

முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 80 சதவீதப் பெண்களும் பொது சிவில் சட்ட மசோதாவை முழுமையாக ஆதரிக்கின்றனர்.
ucc
ucc
Published on

மத்தியப் பிரதேசத்தில் பொது சிவில் சட்ட மசோதாவின் வரைவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்திற்கான இந்த பொது சிவில் சட்ட வரைவை, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான உயர்மட்டக் குழு தயாரித்துள்ளது.

இன்று (திங்கட்கிழமை) தொடங்கவுள்ள சட்டமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக முதல்வர் மோகன் யாதவ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மோகன் யாதவ்

ஜகதீஷ்பூரில் நடைபெற்ற சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய மோகன் யாதவ், இந்த மசோதா பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், சமூக சமத்துவத்தை ஏற்படுத்துவதிலும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சட்டத்தின்படி, ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21 ஆகவும், பெண்களுக்கான திருமண வயது 18 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் நடக்கும் அனைத்து திருமணங்களையும் முறைப்படி பதிவு செய்வது கட்டாயமாக்கப்படுகிறது.

வழக்கமான திருமணங்கள் மட்டுமின்றி, லிவ்-இன் ரிலேஷன்ஷிப், தத்தெடுத்தல், வாடகைத் தாய் முறை மற்றும் ஏஆர்டி மருத்துவ முறை மூலமாகப் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமான சட்டப்பூர்வ உரிமைகளை இந்தச் சட்டம் உறுதி செய்கிறது.

முஸ்லிம்கள்

இந்தச் சட்டத்திற்கு பொதுமக்களிடையே, குறிப்பாக சிறுபான்மையினர் மத்தியில் பெரும் ஆதரவு இருப்பதாக முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், "முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 80 சதவீதப் பெண்களும், 40 சதவீத ஆண்களும் இந்த பொது சிவில் சட்ட மசோதாவை முழுமையாக ஆதரிக்கின்றனர்.

சமூக நல்லிணக்கம், பெண் மேம்பாடு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை நோக்கமாகக் கொண்ட இந்த மசோதாவிற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது அரசியல் லாபங்களைக் கடந்து ஆதரவு அளிக்க வேண்டும்." என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ்

இந்த விவகாரத்தை வெறும் 'இந்து-முஸ்லிம்' மதக் கண்ணோட்டத்திலும், வாக்கு வங்கி அரசியலாகவும் மட்டுமே பார்ப்பதாக காங்கிரசை முதல்வர் மோகன் யாதவ் சாடியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com