16 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா திரும்பும் லலித் மோடி!

கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறினார்.
16 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா திரும்பும் லலித் மோடி!
Published on

ஐபிஎல் தொடரின் நிறுவனரும், முன்னாள் தலைவருமான லலித் மோடி, 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா திரும்ப உள்ளதாக அறிவித்துள்ளார்.

2009-ல் இந்தியாவில் பொதுத்தேர்தல் நடந்ததால், ஐபிஎல் போட்டிகள் தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டன. இதற்கு ரிசர்வ் வங்கியின் முறையான அனுமதி இன்றி வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இந்த வழக்கில் இருந்து தப்பிக்க 2010 ஆம் ஆண்டு அவர் லண்டனுக்குச் சென்றார்.

இந்நிலையில் இந்த வழக்கில் லலித் மோடிக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், அவர் ஐபிஎல் மற்றும் இந்திய கிரிக்கெட்டின் நலனுக்காக மட்டுமே செயல்பட்டார் என்றும் கூறி SAFEMA மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அவருக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, 16 வருடங்களாக நான் கூறி வந்த உண்மை இறுதியாக வென்றுள்ளது. இந்த நீண்ட சட்ட அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளதால், நான் விரைவில் இந்தியா திரும்ப ஆவலோடு காத்திருக்கிறேன் என்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் லலித் மோடி.

வரும் அக்டோபர் மாதம் தனது மகளுக்கு குழந்தை பிறக்க உள்ளதாகவும், அதன்பிறகு இந்தியா வர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு அவர் வந்து செல்லவிருந்தாலும், அவரது நிரந்தர வசிப்பிடம் லண்டனாகவே தொடரும் எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com