கேரளா: தன்னுயிரை துறந்து வெள்ளத்தில் சிக்கிய முதியவரை காப்பாற்றிய நீச்சல் வீரர்!

கேரளாவில் பேரிடர்கள் ஏற்படும்போதெல்லாம் தன்னார்வலராக களமிறங்கி மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கேரளா: தன்னுயிரை நீர்த்து வெள்ளத்தில் சிக்கிய முதியவரை காப்பாற்றிய நீச்சல் வீரர்!
Published on

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்துவருகிறது. கனமழையால் அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளப்பெருக்கும், ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆக.1ம் தேதி கண்ணூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால், காரியங்கோடு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் பென்னி என்னும் 61 வயது முதியவர் சிக்கியுள்ளார்.

ஆற்றங்கரையிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் சிக்கிக்கொண்டிருந்த பென்னியை மீட்க நீச்சர் வீரர் ராஜேஷ் (36) ஷிபின், ஜிதின் உள்ளிட்டோர் அடங்கிய மீட்புக்குழு சென்றுள்ளது.

மற்ற இருவரும் ஆற்றில் இறங்கிய பென்னியிடம் கயிற்றை தூக்கி வீசியுள்ளனர். அந்த கயிற்றை அருகிலுள்ள தென்னை மரத்தில் கட்ட முயன்றபோது கயிற்றில் சிக்கி அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ராஜேஷ் நீந்திசென்று முதியவரை அடைந்துள்ளார்.

முதியவரை மீட்டு கரைக்கு அழைத்து வரும்போது, ராஜேஷ் தன்னிடம் இருந்த பாதுகாப்பு ஜாக்கெட்டை அந்த முதியவருக்குக் கொடுத்துள்ளார்.

முதியவரைக் கரையேற்றிய பின்னர், ஆற்றைக் கடக்கப் பயன்படுத்திய கயிற்றிலிருந்து ராஜேஷின் பிடி நழுவியுள்ளது. இதில் ஆற்றின் அலைகளின் வேகம் மற்றும் கடுமையான நீரோட்டம் காரணமாக அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ராஜேஷை தீயணைப்புத் துறை, மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து மூன்று நாட்களாகத் தீவிரமாக தேடியுள்ளனர். ஆனால் துரதிஷ்டவசமாக நேற்று மாலை புலிங்கோம் பாலத்தின் அருகில் ராஜேஷின் உடல் மீட்கப்பட்டது.

அவரது இறப்பு கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜேஷின் உடலுக்கு கேரள முதலமைச்சர் வி.டி.சுதீஷன் அஞ்சலி செலுத்தினார். எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன், பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

யார் இந்த ராஜேஷ்?

கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் கல்லியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ஒரு நீச்சல் மற்றும் ராப்பெல்லிங் பயிற்றுவிப்பாளராக இருந்துவந்தார். கேளராவில் பேரிடர்கள் ஏற்படும் போதெல்லாம் தன்னார்வலராக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

2018 கேரள வெள்ளம், 2024 வயநாடு நிலச்சரிவு பேரிடர் காலங்களில் தீவிரமாக மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இவருக்கு ஒரு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவரது இறப்பிற்கு கேரள மக்கள், இணையவாசிகள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com