

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று 8 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
அதன்படி, பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் 204 மில்லி மீட்டருக்கும் அதிகமான மிக பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மலப்புறம், பாலக்காடு, திருச்சூர் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த மூன்று நாட்களில் மழை மற்றும் நிலச்சரிவு தொடர்பான விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நாளை (ஆக.4) 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, காசர்கோடு, வயநாடு ஆகிய 5 மாவட்டங்களிலும் உள்ள ஐடிஐ உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.