38 வருடங்களுக்குப் பிறகு காவல் நிலையத்தில் சரணடைந்த கொலைக் குற்றவாளி!

சிறு வயதுப் பாவம் தூங்கவிடவில்லை. 38 ஆண்டுகளுக்குப் பின் பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் மன்னிப்பு கேட்கும் முகமது அலி.
Crime Investigation, Kerala Crime
Crime Investigation, Kerala Crime
Published on

கேரளாவில் கடந்த 1986 ஆம் ஆண்டு நடந்த யாருக்கும் தெரியாமல் புதைந்து போன ஒரு கொலை வழக்கை, 38 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளியே நேரில் வந்து ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து கேரளா போலீசார் அதிர்ச்சியூட்டும் உண்மைகளைத் தற்போது வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

1986 ஆண்டு டிசம்பர் 14 அன்று ஆண்டனி என்ற 14 வயது சிறுவனும், கண்ணூர் பகுதியைச் சேர்ந்த மோகனன் (22) என்ற இளைஞரும் கோழிக்கோடு கூடரஞ்சி கிராமத்தில் உள்ள ஒரு விவசாயத் தோட்டத்தில் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.

அன்று வேலை செய்துகொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.

மோகனன் தனக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதால், ஆத்திரமடைந்த ஆண்டனி, மோகனை அருகில் இருந்த ஆற்றில் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது.

மோகன் ஊருக்கு புதியவர் என்பதால் அவரின் சடலத்தை யார் என்று தெரியவில்லை என்றும் அங்குள்ள மக்கள் கூறியுள்ளனர்.

பிறகு 'அடையாளம் தெரியாத சடலம்' என்று பதிவு செய்து, பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அடக்கம் செய்து வழக்கை அப்படியே முடித்துவிட்டனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு பயந்த ஆண்டனி அங்கிருந்து தப்பித்து தமிழ்நாடு போன்ற பல மாநிலங்களில் வேலை செய்து வந்தார்.

பிறகு இசுலாம் மதத்திற்கு மாறி முகமது அலி என்று தனது பெயரை மாற்றி கொண்டார்.

இவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகளும் பிறந்தது. அதில் ஒரு குழந்தை எதிர்பாராமல் இறந்துவிட்டது. இதுதான் செய்ததற்கு கடவுள் கொடுத்த தண்டனை என்று "என் பாவத்திற்குத்தான் என் குழந்தை இறந்துவிட்டதோ" என்று குற்ற உணர்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்.

நீண்ட வருடம் கழித்து, தனது பிள்ளைகளையெல்லாம் கரை சேர்த்து விட்டு குற்ற உணர்ச்சியுடன் வாழ்வதை விட இப்போதாவது குற்றத்தை ஒப்புக்கொள்ளாம் என்று திருவம்பாடி காவல் நிலையத்திற்கு நேரடியாகச் சென்று சரணடைந்தார்.

நான் பல வருடங்களுக்கு முன்பே சரணடைய நினைத்தேன். ஆனால் என் குழந்தைகள் வளரும் வரை காத்திருந்தேன். இப்போது என் பாவத்திற்கான தண்டனையை ஏற்கத் தயாராக இருக்கிறேன்.

இப்போதுதான் என் மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது" என்று முகமது அலி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

38 வருடப் பழைய வழக்கு என்பதால் எந்த விதமான சாட்சிகளும் இல்லை. ஆனால் போலீசார் தேடுகையில் 1986 ஆம் ஆண்டு வெளியான சிறிய பத்திரிகைச் செய்தி மூலம் ஆவணங்களை வைத்து விசாரணையை தொடங்கினர்.

முகமது அலி கொடுத்த அடையாளங்களை வைத்து மோகனனின் தற்போதைய குடும்பத்தினரையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

மோகனன் வலிப்பு நோய் காரணமாக ஆற்றில் விழுந்து இறந்ததாக நினைத்துக் கொண்டிருந்த குடும்பத்தினர், 38 வருடங்களுக்குப் பிறகு அது கொலை என்று தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தனர்.

குற்றத்தைச் செய்தபோது முகமது அலிக்கு 14 வயது மட்டுமே என்பதால், இந்த வழக்கைச் 'சிறார் நீதிச் சட்டம்' படி எப்படி அணுகுவது என்று போலீசார் தற்போது சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகின்றனர்.

தற்போது ஜாமீனில் இருக்கும் முகமது அலி, "முடிந்தால் மோகனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com