இலாகா ஒதுக்கீட்டில் அதிருப்தி.. பதவியை ராஜினாமா செய்த அமைச்சர் - முதல்வர் டி.கே. சிவகுமாருக்கு ஷாக்

டி.கே. சிவக்குமார் எனது வீட்டிற்கு வந்து, தான் முதலமைச்சரானதும் இந்த அமைச்சரவையைத் துறந்துவிட்டு அதை என்னிடம் தருவதாகக் கூறினார்.
இலாகா ஒதுக்கீட்டில் அதிருப்தி.. பதவியை ராஜினாமா செய்த அமைச்சர் - முதல்வர் டி.கே. சிவகுமாருக்கு ஷாக்
Published on

2023 தேர்தலில் போடப்பட்ட ஒப்பந்தப்படி ஆட்சியின் முதல் பாதியில் முதல்வராக இருந்த சித்தராமையா நீண்ட இழுபறிக்கு பின் தனது பதவியை அண்மையில் விட்டுக்கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் 24வது முதலமைச்சராக டி.கே. சிவக்குமார் நேற்று முன் தினம் பதவியேற்றுக் கொண்டார். இவருடன் 12 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் கர்நாடக அமைச்சரவையில் இலாகா ஒதுக்கீடு தொடர்பான அதிருப்தியில் நேற்று முன்தினம் அமைச்சர் பொறுப்பேற்ற மூத்த தலைவர் ராமலிங்க ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தலைநகரின் உள்கட்டமைப்பை கவனிக்கும் 'பெங்களூரு வளர்ச்சி' இலாகாவை தனக்கு ஒதுக்காததே ராமலிங்க ரெட்டியின் இந்த அதிருப்திக்குக் காரணமாகும்.

கேமராக்களுக்கு முன்னால் தனது ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

"பெங்களூரு இலாகா எனக்கு வழங்கப்படும் என்று இரண்டு முறை கூறினார்கள். ஆனால் இப்போது எனக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அதனால்தான் நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.

டி.கே. சிவக்குமார் எனது வீட்டிற்கு வந்து, தான் முதலமைச்சரானதும் இந்த அமைச்சரவையைத் துறந்துவிட்டு அதை என்னிடம் தருவதாகக் கூறினார்.

பதவியேற்பு விழாவிற்கு முந்தைய நாளும் கூட இந்த இலாகா எனக்குத்தான் என்று உறுதியளிக்கப்பட்டது." என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தான் தொடர்ந்து எம்எல்ஏவாக நீடிப்பேன் என்றும் டி.கே. சிவக்குமார் அல்லது சித்தராமையா மீது தனக்கு தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தனது ராஜினாமா கடிதத்தை நேரில் சமர்ப்பிக்காமல், தனது ஆதரவாளர் ஒருவரின் மூலம் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளருக்கு ராமலிங்க ரெட்டி அனுப்பியுள்ளார்.

முன்னதாக 8 முறை சட்டமன்ற உறுப்பினராக வென்ற 72 வயதான ராமலிங்க ரெட்டி, பெங்களூரு வளர்ச்சி இலாகாவைத் தவிர வேறு எந்த அமைச்சகத்தையும் ஏற்கத் தயாராக இல்லை என்று ஏற்கனவே கூறியிருந்தார்.

ஆனால், அவருக்கு நீர்ப்பாசனத் துறை ஒதுக்கப்பட்டதால் இந்த மோதல் வெடித்தது. ராமலிங்க ரெட்டி இதற்கு முன்பு சித்தராமையா அரசில் போக்குவரத்து மற்றும் அறநிலையத்துறை அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

மறுபுறம், டி.கே. சிவக்குமார் நிதித்துறையைத் தன் வசம் வைத்துக்கொண்டு, முன்பு தன்னிடம் இருந்த பெங்களூரு வளர்ச்சித் துறையை மற்றொரு மூத்த தலைவரான கிருஷ்ண பைரே கவுடாவிடம் ஒப்படைத்துள்ளார்.

கர்நாடக அரசியலில் செல்வாக்குமிக்க வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த 53 வயதான கிருஷ்ண பைரே கவுடா இதற்கு முன்பு சித்தராமையா அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராகப் பணியாற்றியவர் ஆவார்.

கிருஷ்ண பைரே கவுடா, முன்னாள் துணை சபாநாயகரும் விவசாய அமைச்சருமான சி. பைரே கவுடாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com