

கர்நாடகாவில் பாஜக தலைவர் யோகேஷ் கௌடர் கொலை வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வினய் குல்கர்னிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஹுப்பள்ளி-தார்வாட் கிளை நிறுத்தி விதித்து ஜாமீன் வழங்கியது.
பாஜக தலைவர் யோகேஷ் கௌடர் கொலை வழக்கு
கர்நாடகாவில் தார்வாட் மாவட்ட பஞ்சாயத்தின் முன்னாள் உறுப்பினரும், பாஜக தலைவருமான யோகேஷ் கௌடர், தார்வாடில் உள்ள உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சம்பவம் நடந்தபோது அமைச்சராக இருந்த குல்கர்னி, 2020-ல் கைது செய்யப்பட்டு, பின்னர் பெங்களூரு மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இதையடுத்து 2026 மே மாதம் கர்நாடக சட்டமன்றம் தார்வாட் தொகுதியின் பிரதிநிதியாக இருந்த குல்கர்னியை, அவருக்கு தண்டனை விதிக்கப்பட்ட 2026 ஏப்ரல் 15 முதல் தகுதி நீக்கம் செய்து அதிகாரப்பூர்வ அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது.
அரசியலமைப்பின் 191(1)(e) பிரிவின் கீழும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-இன் 8-வது பிரிவின் கீழும் குல்கர்னி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் நீதிமன்றத்தால் தண்டனைத் தீர்ப்பு நிறுத்திவைக்கப்படவில்லை என்றால், அவர் விடுதலையான பிறகு மேலும் ஆறு ஆண்டுகளுக்கு இந்தத் தகுதியிழப்பு தொடரும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டது.
நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் ஏப்ரல் மாதத்தில், குற்றம், சதி மற்றும் கொலை உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் குல்கர்னி மற்றும் 15 பேரைக் குற்றவாளிகளாக அறிவித்து, ஆயுள் தண்டனை விதித்தார்.
இந்த வழக்கு 2019-ல் மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) மாற்றப்பட்டது. 2020-ல் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், முக்கிய குற்றவாளியாக குல்கர்னியின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
கொலை செய்யப்பட்ட கௌடரை வளர்ந்து வரும் அரசியல் போட்டியாளராகக் கருதி, கொலை செய்வதற்காக கூலிப்படையினரை நியமித்ததாகவும் கூறியது.
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றம் ஏப்ரல் 16 அன்று, இந்த வழக்கில் காங்கிரஸ் எம்.எம்.ஏ. குல்கர்னி மற்றும் மேலும் 15 பேரைக் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தது.
நீதிபதிகள் முகமது நவாஸ் மற்றும் ஜி. பசவராஜு ஆகியோர் அடங்கிய அமர்வு, குல்கர்னி 5 லட்சம் ரூபாய்க்கான தனிநபர் பிணைப்பத்திரத்தையும், அதே தொகைக்கு இரண்டு ஜாமீன்தாரர்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் நீதிமன்றத்தின் அனுமதியின்றி அவர் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வினய் குல்கர்னிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் நிறுத்தி விதித்து ஜாமீன் வழங்கியுள்ளது.