ஜார்க்கண்ட் JPSC தேர்வு ரத்து-மாணவர்கள் CBI விசாரணைக்கு தீவிர கோரிக்கை!

அரசு தங்கள் கோரிக்கைகளில் 98 சதவீதத்தை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்த போதிலும், மாணவர்கள் போராட்டத்தை திரும்பப் பெற மறுத்துவிட்டனர்.
Jharkhand JPSC exam
Published on

ஜார்க்கண்ட் அரசு தேர்வாணையம் (JPSC) மற்றும் பணியாளர் தேர்வாணையம் (JSSC) நடத்திய அரசுத் தேர்வுகளில் பெரும் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, அம்மாநில மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மாணவர் பிரதிநிதிகளுடன் ஜார்க்கண்ட் அரசு நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அரசு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது.

14-வது JPSC தேர்வு ரத்து

சர்ச்சைக்குரிய 14-வது JPSC சிவில் சர்வீஸ் தேர்வை ரத்து செய்ய அரசு அதிகாரப்பூர்வமாக சம்மதித்துள்ளது. முறைகேட்டின் குற்றவியல் அம்சங்களை மாநில குற்றப்புலனாய்வுத் துறையும், சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தொடர்புகளை அமலாக்கத்துறையும் விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது.

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விரைவு நீதிமன்றம் மூலம் விசாரணை நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. எதிர்காலத் தேர்வுகளை வெளிப்படைத்தன்மையுடன் நடத்த IIT-ISM, IIM ராஞ்சி மற்றும் XLRI அமைப்புகளின் நிபுணர்களைக் கொண்ட சீர்திருத்தக் குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் போராட்டத்தை கைவிட மறுப்பது ஏன்?

அரசு தங்கள் கோரிக்கைகளில் 98 சதவீதத்தை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்த போதிலும், மாணவர்கள் போராட்டத்தை திரும்பப் பெற மறுத்துவிட்டனர். மாநில அமைப்புகளின் விசாரணை மீது நம்பிக்கையில்லை என்றும், மத்திய புலனாய்வு அமைப்பு மூலமே சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மாணவர்கள் உறுதியாக உள்ளனர். JSSC-CGL தேர்வில் நடந்த முறைகேடுகளையும் கண்டித்து, அந்தத் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

அரசின் விளக்கம்

CGL தேர்வு உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியாகிப் பணியமர்த்தலும் முடிந்துவிட்டதால், அதைத் தன்னிச்சையாக ரத்து செய்ய முடியாது என அரசு தெரிவித்துள்ளது. இதற்கு மாற்றாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்க அரசு முன்வந்ததை மாணவர்கள் நிராகரித்தனர்.

சட்டமன்ற முற்றுகை

தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் ஓயாது என அறிவித்துள்ள மாணவர்கள், நாளை ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர். இத்தேர்வு முறைகேடுகள் தொடர்பாக CBI விசாரணை நடத்தக் கோரியும், தேர்வை ரத்து செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com