ரொம்ப வேதனையா இருக்கு! அசாம் வெள்ள பாதிப்புக்கு ரூ. 3 கோடி வழங்கிய ஜார்க்கண்ட்: ஹேமந்த் சோரன்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயன்றவரை உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
Assam Floods and Hemant Soren
Published on

அசாமில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளத்தால் வேதனை தெரிவித்த ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், அம்மாநில முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தனது அரசு ரூ. 3 கோடி வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நெருக்கடியான நேரத்தில் தனது அரசும் ஜார்க்கண்ட் மக்களும் அசாம் மாநிலத்திற்கு உறுதுணையாக நிற்பதாக கூறி, அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு அவர் கடிதம் எழுதினார்.

சோரென் வேண்டுகோள்:

அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு தனது மாநில குடிமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் சோரன் வேண்டுகோள் விடுத்தார்.

"இந்த நெருக்கடியான நேரத்தில், ஜார்க்கண்ட் அரசும் மாநில மக்களும் அசாமிற்கு உறுதுணையாக நிற்கிறோம். நிவாரணம் மற்றும் மறுவாழ்வு முயற்சிகளில் ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், அசாம் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஜார்க்கண்ட் அரசு ரூ. 3 கோடி வழங்கியுள்ளது," என்று சோரன் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டார்.

"அசாமில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளத்தால் உருவான இக்கட்டான சூழலை கண்டு நான் ஆழ்ந்த வேதனை அடைகிறேன். இந்த பேரிடரில் ஈடுசெய்ய முடியாத உயிர் மற்றும் உடைமை இழப்புகளை சந்தித்த பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, ஜார்க்கண்ட் மக்களின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்," என்று முதலமைச்சர் கூறினார்.

அதிகரிக்கும் உயிரிழப்புகள்:

அசாம் வெள்ளத்தில் மேலும் இருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 97 ஆக உயர்ந்தது. மேலும் 15 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.68 லட்சமாக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.

"ஜார்க்கண்டின் வசதி படைத்த குடிமக்கள் மற்றும் நிறுவனங்கள் அனைவரும் முன்வந்து, அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இயன்றவரை உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் ஒருவருக்கொருவர் கைகொடுத்து உதவுவதே நமது மிகப்பெரிய கடமையாகும்," என்று சோரன் சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டார்.

அசாம் மக்களின் பொறுமை, தைரியம் மற்றும் சேவை மனப்பான்மையையும் ஜார்க்கண்ட் முதலமைச்சர் பாராட்டினார்.

"அசாம் இந்த இயற்கை பேரிடரிலிருந்து விரைவாக மீண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்று மா காமாக்யாவிடம் பிரார்த்திக்கிறேன்," என்று அவர் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com