ஜம்மு-காஷ்மீரில் கொடூரம்: வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு-இருவர் பலி

பிழைப்பு தேடி காஷ்மீருக்கு வந்த ஏழைத் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Kashmir violence
Published on

ஜம்மு-காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள குல்காம் மாவட்டத்தில், வெளிமாநிலத் தொழிலாளர்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் ஒரு தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் இத்தாக்குதலில் பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. பிழைப்பு தேடி காஷ்மீருக்கு வந்த ஏழைத் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கிச் சூடு:

நேற்று இரவு, தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்திற்குட்பட்ட 'கேலம்' பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதிக்குள் மறைந்திருந்து புகுந்த ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள், அங்கு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்களை இலக்கு வைத்து மிக நெருக்கமான தொலைவில் இருந்து சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இருவர் உயிரிழப்பு:

இத்தாக்குதலில், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தீபக் ராத்ரே மற்றும் பூபேந்தர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதில், தீபக் ராத்ரே குண்டுகள் பலமாகத் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். மேலும், உடலின் பல இடங்களில் குண்டடிபட்டுப் படுகாயமடைந்த பூபேந்தர், உடனடியாக அனந்தநாக் அரசு மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீநகரில் உள்ள பிரசித்தி பெற்ற SKIMS மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.

ராணுவ நடவடிக்கை:

தாக்குதல் நடைபெற்ற சில நிமிடங்களிலேயே ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) மற்றும் இந்திய ராணுவத்தின் கூட்டுப் படையினர் சம்பவ இடத்தை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தப்பி ஓடிய பயங்கரவாதிகளைக் கண்டறிவதற்காக கேலம் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள் முழுவதும் சீல் வைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, குல்காம் மற்றும் அனந்தநாக் மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அரசியல் தலைவர்கள் கண்டனம்:

துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா:

"குல்காமில் அப்பாவித் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்தக் கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காஷ்மீர் காவல் துறை தலைமை இயக்குநர் (DGP) நலின் பிரபாத் உடன் பேசப்பட்டு, இத்தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை உடனடியாகக் கண்டறிந்து ஒழிக்குமாறு பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்."

அரசியல் கட்சித் தலைவர்கள்:

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் இத்தாக்குதலுக்குக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். உழைத்து வாழ வந்த அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் மனிதநேயமற்ற செயல் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

காஷ்மீரில் தொடரும் தாக்குதல்கள்:

கடந்த சில ஆண்டுகளாகவே ஜம்மு-காஷ்மீரில் வெளிமாநிலத் தொழிலாளர்கள், உள்ளூர் சிறுபான்மையினர் மற்றும் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து 'இலக்கு வைக்கப்பட்டத் தாக்குதல்கள்' நடத்தப்பட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்புதான் அனந்தநாக் நகரில் காவல் துறை அதிகாரி ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் தொடர்ச்சியாக தற்போது தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல், பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களிடையே மீண்டும் பாதுகாப்பற்ற சூழலையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com