

நாடு முழுவதும் ஜூன் 21 அன்று நடைபெறவிருக்கும் நீட்-யுஜி மறுதேர்வை முன்னிட்டு, இந்தியாவில் டெலிகிராம் பயன்பாட்டிற்கு தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது .
இதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கெஜ்ரிவால், “வினாத்தாள் கசிவைத் தடுக்கும் எண்ணம் மோடி அரசுக்கு இல்லை. ராணுவக் கப்பல்கள் மூலம் வினாத்தாள்களைக் கொண்டு செல்வது, டெலிகிராமை முடக்குவது போன்ற நடவடிக்கைகள் வினாத்தாள் கசிவை நிறுத்துமா? நிச்சயமாக இல்லை.
வினாத்தாள் வியாபாரம் என்பது பல பில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஒரு மோசடி வலை. இந்தப் பணம் அதிகாரத்தின் உச்சி வரை செல்கிறது. வினாத்தாள் கசிவுகள் நிறுத்தப்பட்டால், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்களை விலைக்கு வாங்குவதற்குப் பணம் எங்கிருந்து வரும்?” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மக்களவைத் தலைவர் ராகுல் காந்தி,
‘டெலிகிராம் தடை’ - வினாத்தாள் கசிவை நிறுத்த மோடி அரசின் புதிய தந்திரம். அதாவது, திருடனைப் பிடிப்பதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவரின் கதவில் பூட்டுப் போடுவது போன்றது.
கோடிக்கணக்கான மாணவர்கள் பல ஆண்டுகளாக டெலிகிராமில் படித்து வருகிறார்கள். குறிப்புகள், தேர்வுத் தொடர்கள், கலந்துரையாடல்கள், தேர்விற்கான தயாரிப்புகள் என அனைத்தும் அங்குதான் நடக்கின்றன. அந்த வசதியைப் பறிப்பது எப்படி வினாத்தாள் கசிவுக்குத் தீர்வாகும்?
மேலும் இது ஒன்றும் முழுமையான தீர்வு அல்ல. நாட்டின் ஒவ்வொரு மாணவனுக்கும் இது தெரியும், வினாத்தாள் கசியவிடும் மாஃபியா கும்பலுக்கும் இது தெரியும். அப்படியென்றால், அடுத்த தடை யார் மீது இருக்கும்? வாட்ஸ்அப் மீதா?
தேர்வு நாளில், மாணவர்கள் தீவிரமாகச் சோதனை செய்யப்படுவார்கள். கத்தரிக்கோலால் பாக்கெட்டுகள் வெட்டப்படும். வினாத்தாள்கள் விமானப்படை மூலம் அனுப்பி வைக்கப்படும். இப்படிப்பட்ட நாடகங்களுக்கு அங்கே பஞ்சமே இருக்காது.
ஆனால் நோயின் வேரை ஒருமுறை கூட தாக்கவில்லை. ஏனென்றால் இந்த அரசின் பார்வையின்கீழ் தான் வினாத்தாள் கசியவிடும் மாஃபியா கும்பல் செழித்து வளர்ந்து, இளைஞர்களை இரத்தக் கண்ணீர் வடிக்க வைக்கிறது.
மோடி அவர்களே, நாடகங்களை நிறுத்துங்கள். மாணவர்களை அல்ல, மாஃபியா கும்பலைத் தாக்குங்கள். மாணவர்களின் குரலுக்கு செவிசாய்க்கவும், இல்லையெனில் நாட்டின் இளைஞர்களுக்குத் தங்களின் உரிமைகளைக் கோர நன்றாகவே தெரியும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.