

மத்திய பிரதேச தலைநகர் இந்தூரில் முதுகு தண்டுவட பாதிப்பு காரணமாக அங்குள்ள எம்.ஒய். அரசு மருத்துவமனையில் ஆதர்ஷ் என்ற 12 வயது சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
மேல் சிகிச்சைக்காக சிறுவனை மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் சிறுவனை அழைத்துச் செல்ல பெற்றோர் ஆம்புலன்ஸ் வாகனத்தை தேடியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு ஆம்புலஸ் ஏதும் கிடைக்கவில்லை.
இதனால் அவர்கள் தங்கள் நோய்வாய்ப்பட்ட மகனை 45 டிகிரி கொளுத்தும் வெயிலில் 1 கிலோமீட்டர் தூரம் ஸ்டிரெச்சர் ஒன்றில் வைத்து சாலையில் தள்ளிக்கொண்டே மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
கடும் வெயில் அந்த சிறுவனின் தந்தை ஸ்டிரெச்சரை சாலையில் இழுத்துச் சென்றார்.
பின்னால் சென்ற சிறுவனின் தாய், வெயிலில் இருந்து மகனை பாதுகாக்க தனது சேலையின் நுனியை தண்ணீரில் நனைத்து சிறுவனின் முகத்தில் போர்த்தியவாறு நடந்து சென்றார். அவர்களுடன் எந்த மருத்துவ உதவியாளரும் வரவில்லை.
ஒருவழியாக சிறுவனை மாற்று மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கிருந்த மருத்துவர்களிடம் காட்டியபோது அவர்கள் சிறுவனை பரிசோதித்துவிட்டு மீண்டும் எம்.ஒய். மருத்துவமனைக்கே கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.
இந்த முறையும் வாகனம் கிடைக்காமல் அவர்கள் சிறுவனை மீண்டும் ஸ்டிரெச்சரில் வைத்து தள்ளிக்கொண்டே எம்.ஒய். மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.ஒய். மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.