

மத்திய கிழக்கு கடல் பகுதியில் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி, சுமார் 2,000 கிலோமீட்டர் தூரம் பயணித்து கொச்சி வந்தடைந்த கச்சா எண்ணெய் கப்பலில் இருந்து, வெடிக்காத ஏவுகணையை இந்திய கடற்படை வீரர்கள் மிக ஆபத்தான ஆபரேஷன் மூலம் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
மார்ஷல் தீவுகளின் கொடியுடன் பயணித்த 'எம்டி ஒலிம்பிக் லைஃப்'என்ற கச்சா எண்ணெய் கப்பல், கடந்த மே 26 அன்று ஓமன் வளைகுடாவில் சென்று கொண்டிருந்தபோது ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது.
அந்த ஏவுகணை கப்பலின் வெளிப்புறப் பகுதியைத் துளைத்துக்கொண்டு, பல அறைகளைக் கடந்து, நேராக லட்சக்கணக்கான பேரல் கச்சா எண்ணெய் சேமித்து வைக்கப்பட்டிருந்த முக்கிய எரிபொருள் டேங்கிற்குள் சென்று சிக்கியது.
அதிர்ஷ்டவசமாக அந்த ஏவுகணை அப்போது வெடிக்கவில்லை.
எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறலாம் என்ற 'டைம் பாம்' போன்ற நிலையிலேயே, அந்த கப்பல் அரபிக்கடல் வழியாக 2,000 கி.மீ தூரம் பயணித்து இந்தியாவின் கொச்சி துறைமுகத்தை வந்தடைந்தது.
கப்பலில் இந்திய மாலுமிகள் யாரும் இல்லை என்றாலும், கப்பல் வெடித்தால் கொச்சி துறைமுகமே அழியும் அபாயம் இருந்தது.
தகவல் அறிந்தது, இந்திய கடற்படையின் கொச்சி தலைமையகத்தைச் சேர்ந்த பிரத்யேக வெடிகுண்டு நிபுணர் குழு உடனடியாக களமிறங்கியது.
அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, அந்த ஏவுகணையின் வெடிப்புப் பொறியை முதலில் செயலிழக்கச் செய்தனர். பின்னர், மிக எச்சரிக்கையுடன் ஏவுகணையை டேங்கிற்குள் இருந்து வெளியே எடுத்து, பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர்.
தற்போது நடந்து வரும் அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கு கடல் வழிகளில் வணிகக் கப்பல்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழலில், கப்பல் எந்த நாட்டைச் சேர்ந்ததாக இருந்தாலும், சர்வதேச கடல் பாதுகாப்பைக் கருதி இந்தியா இந்த ஆபத்தான ஆபரேஷனைச் செய்து முடித்துள்ளது.
இதன் மூலம் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியா ஒரு மிக முக்கியமான, நம்பிக்கையான பாதுகாப்பு சக்தி என்பதை உலகிற்கு மீண்டும் நிரூபித்துள்ளது.