இந்தியக் கடற்படைக்கு புதிய பலம்: 3 போர்க்கப்பல்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி!

இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் பலத்தை அதிகரிக்கும் புதிய போர்க்கப்பல்கள்!
INS Dunagiri, INS Agray, INS Sanshodhak
Published on

இந்தியப் பெருங்கடல் பகுதியில் நாட்டின் பாதுகாப்பை பல மடங்கு அதிகரிக்கும் வகையில், இந்தியாவில் 75 சதவீதத்திற்கும் மேல் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட 3 புதிய அதிநவீன போர்க்கப்பல்களை நாளை (ஜூன் 21) இந்தியக் கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படுகின்றன.

நாளை கொல்கத்தாவில் உள்ள சியாம பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் நடைபெறும் மாபெரும் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முன்னிலையில் இந்த மூன்று கப்பல்களையும் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளன.

மத்திய அரசின் 'சுயசார்பு இந்தியா' திட்டத்தின் கீழ், இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்புப் பணியகம் இக்கப்பல்களை வடிவமைத்துள்ளது.

கொல்கத்தாவைச் சேர்ந்த பொதுத்துறை நிறுவனமான கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் இந்த 3 கப்பல்களையும் மிக நேர்த்தியாகக் கட்டியெழுப்பியுள்ளது.

ஒரே நேரத்தில் வெவ்வேறு திறன்களைக் கொண்ட மூன்று முன்னணி கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்படுவது இந்திய வரலாற்றில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

ஐஎன்எஸ் துனகிரி (INS Dunagiri) – ஸ்டெல்த் போர்க்கப்பல்..

'புராஜெக்ட் 17A' திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 5-வது அதிநவீன ஸ்டெல்த் ஃபிரிகேட் ரகப் போர்க்கப்பல் ஆகும். எதிரி நாடுகளின் ரேடார்களின் கண்களில் படாமல் கடலில் மறைந்து பயணிக்கும் பிரத்யேக வடிவமைப்பு கொண்டது.

இதில் எதிரிகளின் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் நடுத்தர தூர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

ஐஎன்எஸ் அக்ராய் (INS Agray) – நீர்மூழ்கி வேட்டையாடி..

இது அர்னாலா கிளாஸ் எனப்படும் ஆழமற்ற கடற்பகுதியில் பயணிக்கும் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர்க்கப்பல் ஆகும்.

கடலோரப் பகுதிகள் மற்றும் குறைந்த ஆழம் கொண்ட கடல் பகுதிகளில் எதிரி நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியும் மேம்பட்ட சோனார் கருவிகளைக் கொண்டுள்ளது.

நீர்மூழ்கிக் கப்பல்களை நீருக்குள்ளேயே அழிக்கும் இலகுரக டார்பிடோக்கள் மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்கள் இதில் உள்ளன.

ஐஎன்எஸ் கன்ஷோதக் (INS Sanshodhak) – பெரிய ஆய்வுக் கப்பல்..

இது கடலாய்வு பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட 4-வது பெரிய சர்வே கப்பல் ஆகும். ஆழ்கடல் மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள நிலப்பரப்புகளைத் துல்லியமாக வரைபடம் தயாரிக்க உதவும்.

தானியங்கி முறையில் இயங்கும் நீர்க்கீழ் வாகனங்கள் மற்றும் ரிமோட் மூலம் இயக்கப்படும் கருவிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

பொருளாதாரப் பங்களிப்பு

இந்தக் கப்பல்களின் கட்டுமானத்தில் 75%-க்கும் அதிகமான பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை ஆகும்.

இத்திட்டத்தின் மூலம் இந்தியாவின் 200-க்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளையும், பொருளாதாரப் பயன்களையும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கடல்சார் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் வேளையில், இந்த 3 நவீன கப்பல்களின் வருகை இந்தியக் கடல் எல்லையைப் பாதுகாப்பதில் மிக முக்கியமான பங்குகளை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com