இந்தியர் பலி: குவைத் மீதான ஈரான் தாக்குதலுக்கு மத்திய அமைச்சகம் கண்டனம்

குவைத் மீது ஈரான் இன்று அதிகாலை மீண்டும் தாக்குதல் நடத்தியது.
இந்தியர் பலி: குவைத் மீதான ஈரான் தாக்குதலுக்கு மத்திய அமைச்சகம் கண்டனம்
Published on

அமெரிக்கா- ஈரான் இடையிலான நிரந்தர போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை ஒப்பந்தம் நிறைவு பெறவில்லை. அமெரிக்கா தொடர்ந்து மிரட்டல் கொடுத்து வரும் நிலையில் ஈரான் அதை எதிர்கொள்கிறது.

அமெரிக்கா உடனான மோதலை தொடர்ந்து ஹர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.

மோதலைக் குறைக்க அமெரிக்கா, ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தியில் ஈரான்மீது கடந்த 26-ம் தேதி அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியது.

இதற்கிடையே, குவைத்தில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து நேற்று அதிகாலை ஈரான் தாக்குதல் நடத்தியது.

குவைத் மீது ஈரான் இன்று அதிகாலை மீண்டும் தாக்குதல் நடத்தியது. குவைத் நோக்கி 2 ஏவுகணைகளை ஈரான் வீசியது. பஹ்ரைன் மீது 3 ஏவுகணைகளை வீசியது. இவற்றை உடனடியாக அமெரிக்கா மற்றும் பஹ்ரைன் வான் பாதுகாப்பு படைகள் இடைமறித்து அழித்தன.

குவைத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இறந்தவரின் பெயர் உள்ளிட்ட விவரத்தை குவைத் அரசு வெளியிடவில்லை.

ஈரான் தாக்குதல் எதிரொலியால் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் தற்காலிகமாக விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது இன்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம்; இந்தத் தாக்குதலில் இந்தியக் குடிமகன் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் பல இந்தியர்கள் காயமடைந்துள்ளனர்.

மேற்கு ஆசிய மோதல்களில், பொதுமக்கள் மற்றும் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகள் இலக்காகக் கொள்ளப்படக் கூடாது; இத்தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவேண்டும்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com