வெனிசுலா அதிபர் டெல்சியுடன் டெல்லியில் பிரதமர் மோடி ஆலோசனை

இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், சுகாதாரம் மற்றும் நவீன தொழில்நுட்ப முதலீடுகளை அதிகரிப்பதற்கான திட்டங்கள்.
DelcyRodriguez, PMModi
DelcyRodriguez, PMModi
Published on

இந்தியாவிற்கு ஐந்து நாட்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள வெனிசுலா நாட்டின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் இன்று (04.06.2026) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தேசிய தலைநகரான புதுடெல்லியில் நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தினார்.

இவர்களுடன் உயர்மட்ட அதிகாரப்பூர்வ குழுவும் இணைந்து பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்கள்.

இரு நாடுகளின் கூட்டுறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் நடைபெற்ற இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

உலகளாவிய சூழ்நிலைகளுக்கு மத்தியில் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும், இரு நாடுகளுக்கிடையிலான கச்சா எண்ணெய் சார்ந்த வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்தும் விளக்கமாக விவாதித்தனர்.

இந்தியா மற்றும் வெனிசுலா இடையே வர்த்தகம், முதலீடுகள், மருத்துவம், பொது சுகாதாரம், போக்குவரத்து மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய முக்கிய துறைகளில் கூட்டாக இணைந்து செயல்படுவது குறித்து இரு தரப்பும் விரிவாக ஆய்வு செய்தன.

இந்தியா-வெனிசுலா உறவை மேம்படுத்துவதில் டெல்சி கொண்டுள்ள நீண்டகால அர்ப்பணிப்பைப் பாராட்டிய ஜெய்சங்கர், இந்த ஐந்து நாள் பயணம் இரு நாட்டு கூட்டுறவில் ஒரு புதிய வேகத்தை ஏற்படுத்தும் எனத் தனது எக்ஸ் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஜூன் 3 முதல் ஜூன் 7 வரை நடைபெறும் இந்த ஐந்து நாட்கள் பயணமானது, இரு நாடுகளின் நீண்டகால நட்புறவிலும், பொருளாதார கூட்டுறவிலும் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com