இந்தியாவில் கியாஸ் சிலிண்டர் பயன்பாடு 19 சதவீதம் சரிவு

மே மாதத்தில் சுமார் 21.2 லட்சம் மெட்ரிக் டன் சமையல் கியாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கியாஸ் சிலிண்டர் பயன்பாடு 19 சதவீதம் சரிவு
Published on

அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக சர்வதேச கடவழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

மத்திய கிழக்கில் இருந்து இருந்து பெருமளவில் எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி இதனால் பாதிக்கப்பட்டு உலகின் பல நாடுகள் நெருக்கடியில் உள்ளன.

இந்தியாவிலும் இதன் தாக்கம் பெரிதும் காணப்படுகிறது. குறிப்பாக சமையலுக்கு தேவையான எல்பிஜி எரிவாயு தட்டுப்பாட்டு சூழலால் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதுடன் வீட்டுப் பயன்பாட்டு சிலிண்டர் உபயோகிப்பதற்கும் முன்பதிவு உள்ளிட்டவற்றில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த சூழலில் இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் பயன்பாடு கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மே மாதம் 19 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது.

மத்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் மே மாதத்தில் சுமார் 21.2 லட்சம் மெட்ரிக் டன் சமையல் கியாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கடந்தாண்டு மே மாதம் 26.2 லட்சம் மெட் ரிக் டன் பயன்படுத்தப்பட்டது. இரண்டுக்கும் இடையில் 19.2 சதவீதம் வித்தியாசம் உள்ளது.

நகர்ப்புறங்களில் கியாஸ் சிலிண்டர் மறுபதிவு இடைவெளி 21 நாட்களில் இருந்து 25 நாட்களாகவும், கிராமப்புறங்களில் 45 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டதுமே முக்கிய காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரம், பெட்ரோல் நுகர்வு 2.8 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் 37.8 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த பெட்ரோல் பயன்பாடு நடப்பாண்டு மே மாதத்தில் 38.9 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது.

மக்கள் பீதியில் பெட்ரோலை வாங்கி சேமித்து வைப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் டீசல் பயன்பாடு கடந்த ஆண்டை விட ஒரு சதவீதத்திற்கும் குறைவாக அதிகரித்துள்ளது. விமான எரிபொருள் பயன்பாடு இதே காலகட்டத்தில் சுமார் 0.8 சதவீதம் குறைந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com