

வளைகுடா போர்ச் சூழலால் சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதித்து பல நாடுகள் எரிபொருள் நெருக்கடியில் சிக்கியுள்ளன.
நெருக்கடி
இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
ஈரான் - இஸ்ரேல் மீண்டும் நேரடி தாக்குதலில் இறங்கியுள்ளதால் அமெரிக்கா முன்னெடுத்த அமைதிப் பேச்சுவார்த்தை முடங்கியுள்ளது.
இதனால் சர்வதேச எண்ணெய் சந்தையில் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் இந்தியாவில் தற்போது 76 முதல் 80 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு உள்ளது என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
விளக்கம்
ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் பேசிய அவர், "சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தற்காலிகமாக உயர்ந்திருந்தாலும், அது நீண்ட காலத்திற்கு இதே உச்சத்தில் நீடிக்காது.
வரும் நாட்களில் உள்நாட்டில் இவற்றுக்கான விலைகள் குறைய வாய்ப்புள்ளது. தற்போதைக்கு நாட்டில் எந்தவொரு எரிபொருள் பற்றாக்குறை அபாயமும் இல்லை.
உலகளாவிய போர்ப் பதற்றங்கள் மற்றும் கடல்வழித் தடைகளுக்கு இடையிலும், இந்தியாவின் எந்தவொரு பகுதியிலும் எரிபொருள் தீர்ந்துபோகும் நிலை ஏற்படவில்லை.
மாறாக நாம் இன்னும் பிற நாடுகளுக்கு எரிபொருளை ஏற்றுமதி செய்து வருகிறோம்.
ஒருவேளை ஹார்முஸ் ஜலசந்தி இன்னும் 30 நாட்களுக்கு மூடப்பட்டே இருந்தாலும் கூட நமது நாட்டில் 60 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் எல்.பி.ஜி இருப்பு இருக்க வேண்டும் என்பதே எனது அமைச்சகத்தின் கொள்கையாகும்.
தற்போது நம்மிடம் அந்த அளவிற்கான இருப்பு உள்ளது. எனவே நிலைமை முற்றிலும் சீராகவும், சிறப்பாகவும் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.