

இந்தியாவில் செயற்கைக்கோள் மூலம் அதிவேக இணைய சேவை வழங்கவிருந்த எலான் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' நிறுவனத்திற்கு இறுதிப் பாதுகாப்பு அனுமதி வழங்காமல் மத்திய அரசு தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது.
ஈரான் வளைகுடா போரின் போது ஸ்டார்லிங்க் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த சர்வதேசப் பாதுகாப்புப் புகார்களைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
ஈரானில் வணிக உரிமம் பெறாத நிலையிலும், அங்கு நடக்கும் அமெரிக்க-ஈரான் மோதலில் ஸ்டார்லிங்க் இணைய முனையங்கள் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
போர்க்கால சூழ்நிலைகளில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தனியார் தகவல் தொடர்பு நிறுவனத்தை இந்திய அரசால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியுமா என்ற அச்சம் பாதுகாப்பு முகமைகளுக்கு எழுந்துள்ளது.
இதனால், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பாதுகாப்புப் பிரிவு பாதுகாப்பு அனுமதியை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது.
இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைக்கான ஆரம்பகட்ட உரிமத்தை ஸ்டார்லிங்க் நிறுவனம் கடந்த ஓராண்டிற்கு முன்பே பெற்றுவிட்டது.
இதற்காகத் தொலைத்தொடர்புத் துறை மற்றும் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் முன்னிலையில் ஸ்டார்லிங்க் நிறுவனம் பல சோதனைகளையும் நடத்திக் காட்டியுள்ளது.
இருப்பினும், தற்போதைய உலகளாவிய பதற்றத்தை அடுத்து, இந்தியப் பாதுகாப்பு விதிகளுக்கு நிறுவனம் எவ்வாறு கட்டுப்படும் என்பது குறித்து கூடுதல் விளக்கங்களை மத்திய அரசு கோரியுள்ளது.
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், நாஸ்டாக் பங்குச்சந்தையில் சுமார் $1.75 டிரில்லியன் (₹166.99 லட்சம் கோடி) மதிப்பில் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய ஐபிஓ-வை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது.
இந்த மாபெரும் வளர்ச்சிக்கு இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் சந்தை மிக அவசியமான ஒன்று. தற்போதைய தடையால் ஸ்டார்லிங்கின் இந்திய வருகை தள்ளிப்போவது மஸ்க்கின் வணிகத் திட்டக்களுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தால், இந்தியாவில் செயற்கைக்கோள் அலைக்கற்றை விலை நிர்ணயம் தொடர்பான மத்திய அமைச்சரவையின் இருந்து ஒப்புதல் திட்டமும் தற்காலிகமாக முடங்கியுள்ளது.