

இந்திய விமான படையின் ஏ.என். 32 ரக விமானம் இன்று விபத்துக்குள்ளானது.
விமானப்படையில் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் இந்த வகை விமானம் அசாம் மாநிலம் ஜோர்க்கட் பகுதியில் தரை இறங்கும் போது இன்று காலை 11 மணி அளவில் விபத்தில் சிக்கியது.
ஓடுதளத்தில் தரை இறங்கிய சில வினாடிகளில் விமானம் தீப்பிடித்து வெடித்ததாக கூறப்படுகிறது. விமானம் வெடித்து தீப்பிடித்தவுடன் அந்த பகுதியே கரும்புகைகளால் சூழப்பட்டது.
இதைத் தொடர்ந்து தீயை கட்டுப்படுத்தவும், நிலைமையை மதிப்பிடவும் அவசர மீட்புக் குழுக்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன. விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இதற்கிடையே இந்திய விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானதில் 5 அதிகாரிகள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. 2 உயர் அதிகாரிகள் உள்பட 5 பேர் இந்த விபத்தில் உயிர் இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு அதிகாரி காயம் அடைந்து உள்ளதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இதற்கு பிறகே பலியானவர்களின் எண்ணிக்கை விவரம் அதிகாரப்பூர்வமாக தெரிய வரும்.
இந்திய விமானப்படை விமானம் விபத்துக்குள்ளானது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் விவரங்களுக்காக காத்து இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார். ஏ.என்.32 என்பது ஒரு வலிமையான இரட்டை இலக்கு என்ஜின் டர்போப் ராப் ராணுவ போக்குவரத்து விமானமாகும். இந்த விமானங்கள் சுமார் 100 இந்திய விமானப்படையில் இருக்கிறது. ஏ.என்.32 கடுமையான சூழல்களில் இருந்து சிறந்து விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த விமானம் 7.5 டன் சரக்கு, 50 பயணிகள் அல்லது 42 பாராசூட் வீரர்களை ஏற்றிச் செல்லக்கூடியது. மேலும் தொலைதூர பகுதிகளில் பொருட்களை விநியோகம் செய்ய இது பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
அசாமில் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் சுகோய் எஸ்.யு.-30 எம்.கே.ஐ. ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதில் இந்திய விமானப் படையை சேர்ந்த 2 விமானிகள் உயிர் இழந்த சில மாதங்களுக்கு பிறகு தற்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.