

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) இணைப் பொதுச் செயலாளர் அதுல் லிமாயே, முன்னாள் அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவுக்கு காரணமான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி குறித்து ஆழமான கள ஆய்வு நடத்துமாறு நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் அவர் தற்போதுள்ள காலகட்டத்தில் தேசிய கண்ணோட்டத்துடன் செயல்படும் அமைப்புகளின் பங்கு மிகவும் முக்கியமானதாகிவிட்டது என்றும் குறிப்பிட்டார்.
ஆர்.எஸ்.எஸ் இணைப் பொதுச் செயலாளர்
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதுல் லிமாயே, டெல்லியில் நடைபெற்ற சிஜேபி கட்சியின் போராட்டம் குறித்து பேசினார்.
அப்போது அவர், “தற்போது டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த நிகழ்வுகள், தேசிய கண்ணோட்டம் கொண்ட அமைப்புகள் இளைஞர்கள் மத்தியில் தடம் பதிப்பது எவ்வளவு அவசியம் என்பதை எடுத்துக்காட்டியுள்ளது.
சிஜேபி கட்சி முதன்மையாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களால் வழி நடத்தப்பட்ட ஒரு இயக்கம் என்பதால், அகில இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் கூட்டமைப்பு போன்ற பல இடதுசாரி மாணவர் அமைப்புகள் இதில் தீவிரமாக ஈடுபட்டன.
மனித உரிமைகள், பழங்குடியினர் பிரச்சனைகள், பெண்கள் உரிமைகள், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமூகங்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், சுற்றுச்சூழல் பிரச்சனைகள், பத்திரிக்கை மற்றும் சட்ட உதவி ஆகியவற்றுடன் தொடர்புடைய ஏராளமான அமைப்புகளும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்கேற்றன.
சில மேடைகளில் இருந்து இந்துக்களுக்கு எதிரான குரல்கள் எவ்வாறு எழுப்பப்பட்டன? சர்ச்சைக்குரிய மற்றும் தேசவிரோத முழக்கங்களை எழுப்பிய அல்லது ஆதரித்த நபர்கள் அங்கு ஏன் இருந்தனர்?
இயக்கத்திற்குள் இடதுசாரி சித்தாந்தம் கொண்ட செல்வாக்கு திடீரென எப்படி அதிகரித்தது? பல்வேறு அரசியல் கட்சிகளும் அவற்றின் நலன்களும் அதனுடன் எப்படி ஒன்று சேர்ந்தது?
முற்றிலும் மாணவர்களால் வழி நடத்தப்பட்ட ஒரு இயக்கம், ஒரே இரவில் எவ்வாறு அரசியல் இயக்கமாக மாறியது? நாடு முழுவதும் ஒரே மாதிரியான செயல்பாடுகளும் போராட்டங்களும் எப்படி ஒருங்கிணைக்கப்பட்டன? இந்த இயக்கம் வெளிநாடுகளிலும் கூட எப்படி விரிவடைந்து ஆதரவை திரட்டியது?
இந்த மனநிலையின் கீழ், கருத்து சுதந்திரம் மற்றும் உள்ளிருப்பு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் உரிமை போன்ற ஜனநாயகத்தால் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளை பயன்படுத்துவதன் மூலம், ஜனநாயக அமைப்புக்கே சவால் விடுக்கப்படுகிறது.
எதிர்கால ஜனநாயகம் என்பது நாடாளுமன்றம் மற்றும் தேர்தல்களால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. அவை தெருக்களாலும், எதிர்ப்பாலும் தீர்மானிக்கப்படும்.
இந்த வகையான போராட்டங்கள் பொதுவாக வரையறுக்கப்பட்ட சில கட்டங்களை உள்ளடக்கியுள்ளது. முதலாவது, பல்வேறு கல்வி மற்றும் சமூக நிறுவனங்களில் கருத்தியல் ரீதியாக ஊடுருவுவதை உள்ளடக்கியது.
இரண்டாவதாக, நிறுவப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அரசியலப்பு கட்டமைப்புகளின் நம்பகத்தன்மையை சீர்குலைப்பதாகும்.
மூன்றாவது, கல்வி, இலக்கியம், ஊடகம், சினிமா மற்றும் பல்கலைக்கழகங்கள் மூலம் ஒரு மாற்று மன நிலையை வளர்த்து, ஒரு கருத்துகளை கொண்டு போர் நடத்துவதாகும்.
இறுதியில் வெகுஜன இயக்கங்கள் மூலம் அரசாங்கம் மற்றும் சமூகத்தின் மீது அழுத்தம் கொடுப்பதே இதன் நோக்கமாகும்.
சுதந்திர இந்தியாவில் அரசியலமைப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை அம்பேத்கர் வலியுறுத்தி இருந்தார்.
அரசியலைப்பிற்கு எதிரான அல்லது வன்முறை இயக்கங்களுக்கு எதிராக எச்சரித்த அம்பேத்கர், அவற்றை அராஜகத்தின் இலக்கணம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இத்தகைய இயக்கங்களுக்கு மிகவும் பயனுள்ள பதில் என்பது வெறும் எதிர்ப்போ அல்லது விமர்சனமோ கிடையாது, மாறாக இளைஞர்களுடன் தொடர்ச்சியான, நேர்மறையான உரையாடலை பேணுவதிலும், தேசியவாத உணர்வை வளர்ப்பதிலும் அடங்கியுள்ளது” என்று ஆர்.எஸ்.எஸ் இணைப் பொதுச் செயலாளர் அதுல் லிமாயே கூறினார்.