டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நீட் தேர்வு முறைகேடுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது சத்யம் பண்டிட் என்ற இந்துத்துவா தலைவர் வன்முறைத் தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவி துண்டு அணிந்த நபர் மாணவர்களைத் தாக்கி, மிரட்டி, கேமரா முன்னிலையில் மன்னிப்புக் கேட்க வைக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயை பரவி வருகிறது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக் கோரி,'காக்ரோச் ஜனதா கட்சி' ஜன்தர் மந்தரில் 36 நாட்களாகத் தொடர்ந்து போராட்டம் நடத்தியது.
இந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்ட மறுநாளில் இந்த அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. வீடியோவில் வெள்ளை குர்தா மட்டும் காவித் துண்டு அணிந்த சத்யம் பண்டிட், இரண்டு மாணவர்களை வழிமறித்து அவர்களின் பெயர் மற்றும் எந்த கட்சிக்கு ஆதரவு அளிக்கிறீர்கள் என்று மிரட்டும் தொனியில் கேள்வி எழுப்புகிறார்.
மாணவர்கள் தாங்கள் 'இந்துக்கள்' என்று பதிலளித்த போதும், 'அப்படியென்றால் தேசவிரோத மாணவர்களை உருவாக்கும் இந்தத் தரப்புக்கு ஏன் ஆதரவு தருகிறீர்கள்?' என்று கூறி ஆபாச வார்த்தைகளால் திட்டுயுள்ளார்.
அதோடு நிறுத்தாமல், ஒரு மாணவனின் சட்டையைப் பிடித்து இழுத்துக் கொடூரமாகக் தாக்கியுள்ளார்.
மேலும், அந்த மாணவனைப் பலவந்தமாக கேமராவைப் பார்க்க வைத்து மன்னிப்புக் கேட்கச் செய்ததோடு, 'இனிமேல் இந்த பக்கம் உன்னைப் பார்த்தால் அவ்வளவுதான், அடித்துத் துவம்சம் செய்துவிடுவேன்' என்று கொடூரமாக மிரட்டியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், 'பாஜக மற்றும் அதன் கூட்டாளிகளின் அநாகரிகமான வன்முறைக்கு இதே சாட்சி.
இளைஞர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை பாஜகவினர் மீண்டும் ஒருமுறை துரோகம் மூலம் உடைத்தெறிந்துள்ளனர்' என்று சாடியுள்ளார்.
இதேபோல், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, "சத்யம் பண்டிட் என்ற இந்த வன்முறை நபரை டெல்லி போலீசார் உடனடியாகக் கைது செய்ய வேண்டும், இல்லையென்றால் நாங்களே எப்ஐஆர் பதிவு செய்வோம்" என்று எச்சரித்துள்ளார்.
நீட்-யுஜி வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் 36 நாட்கள் நடத்தப்பட்ட போராட்டத்திற்குப் பின், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார்.
மாணவர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷிக்கு கல்வி அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.