

ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள ஹான்ஷி நகரில், ஜிம் உரிமையாளர் ஒருவர் உடற்பயிற்சி கூடத்திற்குள்ளேயே மிக கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
உயிரிழந்த 25 வயதான தீபக், ஹான்சி நகரில் சொந்தமாக உடற்பயிற்சி கூடம் ஒன்றை நடத்தி வந்தார்.
வழக்கம் போல் அதிகாலையில் அவர் ஜிம்மிற்கு வந்து உடற்பயிற்சிகளைச் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு திடீரென நுழைந்த அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள், தங்களது துப்பாக்கிகளை எடுத்து தீபக்கை நோக்கி கண்மூடித்தனமாகச் சுடத் தொடங்கினர்.
தப்பிக்க முயன்ற தீபக் மீது அந்த நபர்கள் மிக அருகாமையில் நின்று கொடூரமாக 10 முறை தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த தீபக், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜிம்மில் இருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த கொடூரக் காட்சிகள் பதிவாகியுள்ளன.
கொலையாளிகள் முகத்தை மறைக்காமல் வந்து துணிச்சலாக இக்குற்றத்தைச் செய்துவிட்டு, துப்பாக்கிகளுடன் அங்கிருந்து தப்பியோடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், தீபக் சமீபத்தில் ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதாகவும், இந்தத் திருமணத்தில் பெண் வீட்டாருக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறப்படுகிறது.
எனவே, இது கௌரவக் கொலை அல்லது குடும்பப் பகை காரணமாக நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஹான்ஷி நகரப் போலீசார், தீபக்கின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் காவல்துறை அதிககாரிகள் தெரிவித்துள்ளனர்.