ஜே.சி.பி. வாகனத்தில் சென்ற மணமகன் ஊர்வலம்- சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், ​பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், போக்குவரத்து விதிகளை மீறியும் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டனர்.
ஜே.சி.பி. வாகனத்தில் சென்ற மணமகன் ஊர்வலம்- சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
Published on

திருமணங்களை விமர்சையாக நடத்தி வரும் இன்றைய கால கட்டத்தில் மணமக்களின் ஊர்வலம் வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என மணமக்களின் குடும்பத்தினர் கருதுகின்றனர்.

அதன்படி நாட்டின் ஒவ்வொரு மாநிலங்களிலும் தங்கள் பாரம்பரிய முறைப்படியும், மேள-தாளங்கள் முழங்க மணமக்களை அவர்களது உறவினர்கள், ஊர்மக்கள் ஊர்வலமாக திருமண மண்டபத்திற்கு அழைத்து வரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தின் உம்ரி கலா கிராமத்தை சேர்ந்தவர் உஸ்மான். இவர் தனது திருமணத்திற்கு பாரம்பரிய குதிரை வண்டியைத் தவிர்த்துவிட்டு ஜே.சி.பி. வாகனத்தின் மேல் ஏறியதோடு, உறவினர்கள் சிலரையும் ஜே.சி.பி.யில் ஏற்றி ஊர்வலமாக சென்றுள்ளார்.

அப்போது புல்டோசரின் மேல் அமர்ந்து கொண்டு உஸ்மான் சிகரெட் பிடிப்பதும், அவரது உறவினர்கள் நகரும் அந்த வாகனத்தின் மீது ஏறி டி.ஜே. இசைக்கு ஏற்ப நடனமாடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், ​பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், போக்குவரத்து விதிகளை மீறியும் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டனர்.

இதற்கிடையே வீடியோவின் அடிப்படையில் காந்த் பகுதி போலீசார் விரைந்து செயல்பட்டு, அந்த ஜே.சி.பி. வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், போக்குவரத்து விதிகளை மீறிய மாப்பிள்ளை தரப்பினர் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com