'குழந்தைகளை கவனித்துக்கொள்' - இறப்பதற்கு முன்பு மனைவிக்கு குறுந்தகவல் அனுப்பிய மாலுமி

ஓமன் கடற்பகுதியில் அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட 3 இந்திய மாலுமிகளில் ஒருவர் ஆந்திராவை சேர்ந்த சுரேஷ் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
Bhargavi - Suresh
Published on

சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாலுமி ஒருவர். கடைசியாக தனது மனைவிக்கு அனுப்பிய குறுந்தகவல் கண்ணீரை வரவழைக்கும் வகையில் அமைந்துள்ளது.

தலைமை என்ஜினீயர்

ஓமன் கடற்பகுதியில் அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட 3 இந்திய மாலுமிகளில் ஒருவர் ஆந்திராவை சேர்ந்த சுரேஷ் (வயது 44) என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இவருக்கு பார்கவி என்ற மனைவியும், 13 மற்றும் 10 வயதில் 2 மகன்களும் உள்ளனர். மேலும் தனது தாய் மற்றும் தங்கையுடன் சுரேஷ் வசித்து வந்தார்.

சுமார் 20 ஆண்டுகளாக இந்த பணியில் சிறப்பாக செயல்பட்டு வந்த அவர் கப்பலின் தலைமை என்ஜினீயர் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளார். அவரைப்பற்றிய உருக்கமான தகவல்களை அவரது மனைவி பார்கவி பகிர்ந்துள்ளார்.

மனைவிக்கு குறுந்தகவல்

அதாவது மாதக்கணக்கில் கடலில் கப்பலிலேயே கழிக்கும் அவர், தினமும் காலையில் 'குட் மார்னிங்' என தனது மனைவிக்கு செல்போனில் குறுந்தகவல் அனுப்பிய பிறகே தனது பணிகளை தொடங்குவார். இரவில் தூங்கச்செல்லும் முன்பு, 'குட் நைட்' என செய்தி அனுப்பி விடுவார்.

அதைப்போல தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான், 'குட் நைட், குழந்தைகளை கவனித்துக்கொள்' என பார்கவிக்கு குறுந்தகவல் அனுப்பி இருந்தார்.

பின்னர் காலையில் அவரது 'குட் மார்னிங்' குறுஞ்செய்திக்காக காத்திருந்த பார்கவிக்கு, ஏமாற்றமே மிஞ்சியது. எனினும் அவர் பணி நெருக்கடி காரணமாக குறுஞ்செய்தி அனுப்ப மறந்திருக்கலாம் என நினைத்து தனது பணிகளை கவனிக்கத்தொடங்கினார்.

15-வது திருமண நாள்

ஆனால் சில மணி நேரத்தில் சுரேசின் இறப்புச்செய்திதான் கிடைத்தது. இதைக்கேட்டு பார்கவி மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வருகிற 24-ந்தேதி சுரேஷ்-பார்கவி தம்பதிக்கு 15-வது திருமண நாள் ஆகும். எனவே அதற்காக ஊருக்கு வந்து, குடும்பத்தினருடனான ஒரு சந்திப்பை நடத்துவதற்கும் சுரேஷ் திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் இந்த கனவை நனவாக்க முடியாமலே அவரது வாழ்க்கை முடிந்துள்ளது.

இதைப்போல சுரேஷின் இந்த கடல் பயணமும் எதிர்பாராத வகையில்தான் நிகழ்ந்துள்ளது.

10 நாள் பணிக்காக சென்றவர்

அதாவது மற்றொரு அதிகாரிக்கு பதிலாள் என்ற முறையில் 10 நாள் பணிக்காக மட்டுமே அனுப்பப்பட்டு உள்ளார். ஆனால் அவர் பணிக்கு சேர்ந்த அடுத்த சில நாட்களிலேயே சீனப்புத்தாண்டு விடுமுறை காரணமாக, சரக்குகளை இறக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. இதனால் சுமார் 20 நாட்கள் நங்கூரமிட்டிருந்த இடத்திலேயே தங்கியிருந்தனர். அதனைத் தொடர்ந்து, போர் தீவிரமடைந்ததால் அவரால் நாடு திரும்ப முடியவில்லை.

இவ்வாறு அடுத்தடுத்து ஏற்பட்ட சிக்கல்களால் கடலிலேயே நீண்ட காலம் தங்கியிருந்த சுரேஷ் தற்போது இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வில் சிக்கி உள்ளார். இந்த தகவல்களை அவரது மனைவி பார்கவி கண்ணீர் மல்க கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com