FSSAI அதிரடி: டாபர் நிறுவனத்தின் 100% தூய்மை விளம்பரங்களுக்குத் தடை!

இந்த பொருட்கள் தரமற்றவை என்றோ அல்லது சாப்பிடப் பாதுகாப்பற்றவை என்றோ FSSAI கூறவில்லை
FSSAI - Dabur
Published on

டாபர் நிறுவனம் தனது தயாரிப்புகளான தேன், நெய், எண்ணெய் மற்றும் வினிகர் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் '100 சதவீதம் தூய்மையானது' என்று விளம்பரம் செய்ய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது.

விவகாரம் என்ன?

டாபர் நிறுவனம் தனது இணையதளத்திலும், தயாரிப்பு லேபிள்களிலும் "100% இயற்கை", "100% ஆர்கானிக்", "100% தூய்மைக்கு உத்திரவாதம்" போன்ற வாசகங்களைப் பயன்படுத்தி வந்தது.

இந்த '100%' என்ற வார்த்தை நுகர்வோரை திசைதிருப்பும் வகையிலும், சட்டவிதிகளுக்குப் புறம்பாகவும் இருப்பதாக FSSAI தெரிவித்துள்ளது.

முக்கியக் காரணங்கள்:

எந்தவொரு உணவுப் பொருளையும் '100% தூய்மையானது' என்று முழுமையாக நிரூபிக்க முடியாது என்பதால், இந்த வாசகங்கள் மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளன.

டாபரின் ஆர்கானிக் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் ஆகியவற்றில், உரிய அனுமதியின்றி 'ஜெவிக் பாரத்' என்ற ஆர்கானிக் முத்திரை பயன்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2020 மே மாதமே இது போன்ற '100% விளம்பரங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று ஒட்டுமொத்த உணவு நிறுவங்களுக்கும் FSSAI எச்சரிக்கை விடுத்திருந்தது.

டாபர் நிறுவனத்திற்குத் தனியாக நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காததால் தற்போது இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்புகள் ஆபத்தானவையா?

டாபர் நிறுவனத்தின் இந்த பொருட்கள் தரமற்றவை என்றோ அல்லது சாப்பிடப் பாதுகாப்பற்றவை என்றோ FSSAI கூறவில்லை.

இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க அவர்கள் லேபிளிங் செய்த விதம் மற்றும் தவறான விளம்பர உத்திக்காக மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்தகட்ட நடவடிக்கை:

குறிப்பிட்ட அந்த தயாரிப்புகளைச் சந்தையில் விற்பனை செய்வதை டாபர் நிறுவனம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் FSSAI உத்தரவிட்டுள்ளது.

டாபர் நிறுவனம் இந்த நோட்டீசை ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com