

பயிற்சி ஐபிஎஸ் பெண் அதிகாரி அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர் தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் சிவராம் பள்ளியில் உள்ள தேசிய போலீஸ் அகாடமி பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்த பயிற்சி பள்ளியில் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், வூல்ல பாலத்தை சேர்ந்த உதய கிருஷ்ணா ரெட்டி என்பவர் பயிற்சியாளராக வேலை செய்து வருகிறார்.
கடந்த மாதம் 23-ந்தேதி பெண் பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரியின் வாட்ஸ்அப் எண்ணிற்கு உதய கிருஷ்ணா ரெட்டி ஆபாச படங்களை அனுப்பி வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். தொடர்ந்து அகாடமியில் அவரது நண்பர்கள் முன்னிலையில் அவரது கண்ணியத்தை கெடுக்கும் வகையில் தெலுங்கில் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
வேறு ஒருவருடன் கள்ளக்காதல் உள்ளதாகவும் கூறியுள்ளார். அவரது செல்போனை வலுக்கட்டாயமாக பறித்து தனிப்பட்ட தகவலை பார்த்தார்.
பெண் அதிகாரியின் தனிப்பட்ட வீடியோக்களை எடுத்து அவரது கணவருக்கு அனுப்பி வைத்தார். பயிற்சி அதிகாரியின் தொல்லை நாளுக்கு, நாள் அதிகரித்ததால் பயிற்சி ஐபிஎஸ் பெண் அதிகாரி அட்டாப்பூர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் முதற்கட்டமாக விசாரணை நடத்தியதில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.