பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு பாடங்களை சேர்க்கும் மகாராஷ்டிரா - முதலமைச்சர் பட்னாவிஸ் உத்தரவு

பிரச்சாரத்தை தொடங்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் குறிப்பிட்டார்.
Devendra Fadnavis
Published on

மகாராஷ்டிரா மாநில பள்ளி பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் போதை மீட்பு தொடர்பான பாடங்களை சேர்க்க அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிக் கல்வியில் நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக மகாராஷ்டிரா தொடர்ந்து திகழ்கிறது என்றும், கல்வித் தரம், மராத்தி மொழியை ஊக்குவித்தல், வரலாற்றை பாதுகாத்தல் மற்றும் நவீன வசதிகள் ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை பேணுவதன் மூலம் மாணவர்-மையக் கல்வி முறையை மாநிலம் வலுப்படுத்தி வருகிறது என்றும் பட்னாவிஸ் தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித் துறையின் ஆய்வு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அவர், போதைப்பொருள் தடுப்பு மற்றும் மீட்பு தொடர்பான பாடங்களை பள்ளி பாடத்திட்டத்தில் இணைக்கும் செயல்முறையை தொடங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

போதை இல்லா பள்ளி:

பள்ளிகளில் போதைப்பொருள் தடுப்பு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைக்கான குழுக்களை அமைக்கவும், "போதைப்பொருள் இல்லாத பள்ளி" (Drug-Free School) என்ற பிரச்சாரத்தை தொடங்கவும் மாநில அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் குறிப்பிட்டார்.

பள்ளி பாதுகாப்பை வலுப்படுத்தவும், மாணவர்களிடையே இணையவழி மோசடிகள் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மாநில அரசின் முயற்சிகளை தொடர்ந்து, என்.சி.இ.ஆர்.டி. (NCERT) பாடப்புத்தகங்களில் 17-ஆம் நூற்றாண்டின் வீர மன்னரான சத்ரபதி சிவாஜி மகாராஜின் வரலாறுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று பட்னாவிஸ் சுட்டிக்காட்டினார். புகழ்பெற்ற மராட்டிய மன்னரின் வரலாற்றையும் சாதனைகளையும் பரவலாக உள்ளடக்கும் வகையில் பாடத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

புதுமையான முன்னெடுப்புகள்:

மாநிலம் முழுவதும் உள்ள எஸ்.எஸ்.சி. (SSC), சி.பி.எஸ்.இ. (CBSE), ஐ.சி.எஸ்.இ. (ICSE) மற்றும் ஐ.பி. (IB) வாரியங்களின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழியை கற்பிப்பதும், அம்மொழியிலேயே தேர்வுகள் நடத்துவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவித்தனர்.

பள்ளிக் கல்விக்கான தேசிய செயல்திறன் தரவரிசை குறியீட்டில் (PGI 2.0) மகாராஷ்டிராா தொடர்ந்து இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளது என்று கூறிய பட்னாவிஸ், 'பி.எம். ஸ்ரீ' (PM SHRI) பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் புதுமையான முன்னெடுப்புகளை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பள்ளி மாணவர்களின் ஆதார் சரிபார்ப்பு, கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் 35 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விச் சலுகைகள், 'பவித்ரா' (Pavitra) ஆசிரியர் பணி நியமன இணையதளம் மற்றும் தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 உள்ளிட்ட முக்கியத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

அதிகாரிகள் விளக்கம்:

கூட்டத்தில் அளிக்கப்பட்ட விளக்கக் காட்சியின்படி, நாட்டின் மொத்த பள்ளிகளில் 9.34 சதவீதமும், ஆசிரியர்களில் 8.84 சதவீதமும், மாணவர்களில் 7.69 சதவீதமும் மகாராஷ்டிராவில் உள்ளனர். இம்மாநிலத்தில் 1,08,065 பள்ளிகள் உள்ளன; இவற்றில் 2,20,48,443 மாணவர்கள் பயில்கின்றனர், மேலும் மாணவர்-ஆசிரியர் விகிதம் 28:1 ஆகப் பராமரிக்கப்படுகிறது.

இப்பள்ளிகளில் 64,341 அரசு பள்ளிகள் மற்றும் 29,486 அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் உள்ளன; மீதமுள்ளவை சுயநிதி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு பள்ளிகளாகும்.

பள்ளி கல்வியை மேம்படுத்துவதற்காக 'நிபுண் மகாராஷ்டிரா இயக்கம்' (Nipun Maharashtra Mission), 'ராஷ்ட்ரிய பிரதம்' (Rashtriya Pratham) பிரச்சாரம், "மாஜி ஷாலா சுந்தர் ஷாலா" (எனது பள்ளி, அழகான பள்ளி) திட்டம் மற்றும் மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com