

“பொதுத் தேர்வு முறைகேடுகள் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா 2026” நாடாளுமன்றத்தின் மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி மற்றும் முழக்கங்களுக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்திருத்தம் மூலம் வினாத்தாள் கசிவு அல்லது தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் தனிநபர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ. 50 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
திட்டமிட்டு குழுவாக அரங்கேற்றப்படும் பெரிய அளவிலான குற்றங்களுக்கு 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ. 10 கோடி வரை அபராதம் விதிக்க மசோதா வழிவகை செய்கிறது.
வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்க, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். இந்த வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 3 மாதங்களுக்குள் விசாரணை முடிக்கப்பட வேண்டும்.
ஜூலை 27 அன்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகப்படுத்திய இந்த மசோதா, மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட உள்ளது.
டெல்லி ஜந்தர்மந்தரில் நீட் முறைகேடு தொடர்பாகப் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி மற்றும் தாக்குதல்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் காரணம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
இதனால் அவையில் ஏற்பட்ட கடும் கூச்சல், குழப்பம் மற்றும் எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புக்கு இடையே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.